வேலூரில் வியக்க வைத்த காய்கறி, கிழங்கு திருவிழா

வேலூரில் வியக்க வைத்த காய்கறி, கிழங்கு திருவிழா
X

காய்கறி திருவிழாவில் பல மாவட்டங்களில் சிறப்பு வாய்ந்த காய்கறிகள், கிழங்கு வகைகள் இடம்பெற்றிருந்தன.

வேலூரில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலை பள்ளியில் மாபெரும் மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழாவை தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு நடத்தியது.

தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பின் சார்பில், மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா வேலுார் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விவசாயிகள், பொதுமக்கள் வியக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்திருந்தது. இந்த திருவிழாவில் வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு மரபு விதைகளை போட்டி போட்டு கொண்டு வாங்கிச் சென்றனர்.


இதில், 500க்கும் அதிகமான மரபு காய்கறி மற்றும் கிழங்கு வகைகளின் கண்காட்சி மற்றும் விதைகள் விற்பனை நடந்தது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சிறப்பு வாய்ந்த காய்கறிகள், கிழங்கு வகைகள் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக கண்காட்சியில், மதனப்பள்ளி, கருஞ்சிவப்பு, லைபீரியா, கருப்பு வால், கருப்பு பிளம், சிகப்பு வால், கொடி பிளம், பச்சை வரி, ஆப்பிள் உள்ளிட்ட 86 வகையான தக்காளி வகைகளும்,

வெள்ளை நிற கத்தரி, செவந்தம்பட்டி கத்தரி, வெள்ளை தொப்பி கத்தரி, திண்டுக்கல் சல்லி, பச்சை வரி, வெள்ளை முள், காளான், வெள்ளை மடிப்பு, பொள்ளாச்சி வரி உள்ளிட்ட 30 கத்தரிக்காய் வகைகளும் இடம்பெற்று இருந்தது.


அதோடு, 60 வகையான மிளகாய் வகைகள், 40 வகையான சுரக்காய் மற்றும் பரங்கிக்காய் வகைகள் இடம்பெற்று இருந்தது.

இதேபோன்று, சிகப்பு மக்காச்சோளம், மஞ்சள் மக்காச்சோளம், பலநிற மக்காச்சோளம், கருப்பு மக்காச்சோளம் ஆகியவையும், பன்னீர் பாகற்காய், ருத்திராட்சை பாகற்காய், வெளிர் பச்சை பாகற்காய், குருவி தலை பாகற்காய் என பாகற்காய் வகைகளும் இடம்பெற்று இருந்தது.

கிழங்கு வகைகளில் யானை பாதம் கிழங்கு, முள்ளன் கிழங்கு, வாழை வெற்றிலைவள்ளி, சேனை வெற்றிலை வள்ளி, பரணி வெற்றிலைவள்ளி, கூகை கிழங்கு உள்ளிட்ட 90 வகையான கிழங்குகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

'இப்போது புவிசார் குறியீடு பெற்றுள்ள வேலூர் இலவம்பாடி கத்தரிக்காய் கூட நம்மிடம் விதைகளாக வழங்கப்படுபவை மரபணு மாற்றப்பட்டவை அல்லது ஒட்டுரகங்கள்தான்.

நாங்கள் அதை அணைக்கட்டு, ஒடுகத்தூர் பகுதிகளில் தேடித்தேடி மரபு சார்ந்த இலவம்பாடி கத்தரி விதைகளை வாங்கி சேகரித்து உற்பத்தி செய்து தருகிறோம்' என தெரிவித்தனர்.


இக்கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட வகைகளில் பாரம்பரிய காய்கறிகள், விதைகள், அவற்றுக்கான செடி, கொடிகள், கிழங்குகள், கீரை வகைகள், நாம் உண்ணத்தகுந்த களைகளாக பாவித்து வீசியெறியும் கீரைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்காட்சியை பார்த்து காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர். காய்கறிகளுடன், விதைகளையும் அதிகளவில் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அதோடு இயற்கை வேளாண் ஆர்வலர்கள், கூட்டமைப்பு நிர்வாகிகள் பேச்சுக்களை ஆர்வமுடன் கவனித்து பார்வையாளர்கள் குறிப்பு எடுத்துக்கொண்டனர்.

இந்த அவசர காலத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளை உண்டு வாழ்ந்து வரும் மக்களுக்கு, உடலுக்கு நன்மையை மட்டுமே அளிக்கும் மரபு காய்கறிகள், கிழங்குகள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது.

இதனால், பலரும் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் கிழங்குகளின் விதைகளை வாங்கிச் சென்றனர். அதோடு, விவசாயிகளும் தங்களுக்கு தேவையான விதைகளை பெற்று சென்றனர்.

இதில் சிறப்பு விருந்தினராக சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் கலந்து கொண்டு பேசுகையில்,

விவசாயிகள் சரியான விதைகளை தேர்வு செய்வதன் மூலம் நாட்டு விதைகளை திரும்ப திரும்ப உருவாக்கலாம். ஆனால் மரபணு மாற்றப்பட்ட விதையால் உருவாகும் காய்கறிகளில் இருந்து கிடைக்கும் விதைகள் மீண்டும் முளைக்காது. விளைச்சலும் சரியாக இருக்காது.


கோயம்புத்தூர் சிங்காநல்லூர் மத்திய சிறை வளாகத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலில் இருமடி பாத்தி முறையில் விவசாயம் செய்வதுடன் விதைகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு இயற்கை உரம், பஞ்சகவ்யம், அமிர்தகலசம், இயற்கை பூச்சி விரட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இதனால் கூடுதலாகவும் விளைச்சல் கிடைப்பதுடன், விதைகளும் தாராளமாக கிடைக்கிறது. விதைகளுக்காக எங்கும் தேடி செல்வதில்லை. வேலூர் மாவட்டத்திலும் விவசாயிகளும் இதை முன்மாதிரியாக கொண்டு விவசாயம் செய்தால் நீடித்த நிலையான வளர்ச்சியை பெற முடியும். வேலூர் சிறையிலும் அதை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!