வேலூர் பழைய பஸ்நிலையத்தில் முககவசம் அணியாத 109 பேருக்கு கொரோனா பரிசோதனை

வேலூர் பழைய பஸ்நிலையத்தில் முககவசம் அணியாத 109 பேருக்கு கொரோனா பரிசோதனை
X
வேலூர் பழைய பஸ்நிலையத்தில் முககவசம் அணியாமல் பஸ் ஏற வந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையங்கள், மார்க்கெட், பஜார் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

அதைத்தவிர பொதுஇடங்களில் முககவசம் அணியாத நபர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், கடைகள், ஓட்டல், வணிகவளாகங்களில் கொரோனா தடுப்பு விதியை பின்பற்றாதவர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து வருகிறார்கள். ஆனாலும் பலர் கொரோனா பரவல் அச்சமின்றி பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.

அதையடுத்து முககவசம் அணியாத நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும்படி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட பழைய பஸ்நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், முககவசம் அணியாமல் பஸ் ஏற வந்த பயணிகள் மற்றும் அந்த வழியாக பிற இடங்களுக்கு சென்ற பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் மடக்கி அவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் முககவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுரை கூறி, மாநகராட்சி சார்பில் முககவசம் ஒன்று வழங்கப்பட்டது.

கொரோனா பரிசோதனை செய்ய மறுத்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, உடனடியாக வசூல் செய்யப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் முக கவசம் அணியாத 109 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 44 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.8,800 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!