சிறை அலுவலர்கள் கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும்: டெல்லி சிறைத்துறை டி.ஜி.பி.

சிறை அலுவலர்கள் கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும்: டெல்லி சிறைத்துறை டி.ஜி.பி.
X

 சிறப்பாகப் பயிற்சி முடித்தவர்களுக்கு டெல்லி சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப்கோயல் பதக்கங்கள் வழங்கினார்

சிறை அலுவலர்கள், கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும் என சிறை அலுவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் டெல்லி சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் கூறினார்

வேலூர் தொரப்பாடியில் சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகம் (ஆப்கா) அமைந்துள்ளது. இங்கு சிறைத்துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆப்காவில் 26- வது பிரிவு அலுவலர்களுக்கு பயிற்சி தொடங்கியது. இந்தப் பயிற்சி 9 மாதங்கள் நடந்தது. இதில் டெல்லி திகார் சிறையைச் சேர்ந்த 53 உதவி கண்காணிப்பாளர்கள், ஆந்திராவைச் சேர்ந்த 3 துணை ஜெயிலர்கள், தமிழகத்தைச் சேர்ந்த 6 உதவி ஜெயிலர்கள், கேரளாவைச் சேர்ந்த 3 உதவி கண்காணிப்பாளர்கள் என 4 பெண்கள் உள்பட 65 பேர் பயிற்சி பெற்று வந்தனர்.

அவர்களுக்கு சிறை நிர்வாகம், குற்றவியல், சமூகவியல் மற்றும் சமூக பணி, உளவியல், குற்றவியல் சட்டங்கள் மற்றும் சிறப்புச் சட்டங்கள், மனித உரிமைகள் மற்றும் நல்ல சிறை மேலாண்மை, இந்திய அரசியலமைப்பு, குற்றவியல் நீதி அமைப்பு, மேலாண்மை கோட்பாடுகள், சிறை நிர்வாகத்தில் தொழில்நுட்பம் மற்றும் தடய அறிவியல் போன்றவை குறித்து வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் உடல் திறன் பயிற்சி, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகள், ஆயுதங்களை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முடித்தவர்களுக்கு நிறைவு விழா இன்று நடந்தது. சிறப்பு விருந்தினராக டெல்லி சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப்கோயல் கலந்து கொண்டு, சிறப்பாகப் பயிற்சி முடித்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

சிறைச்சாலையின் முக்கியமானப் பணி சிறைக்கைதிகள் சிறையில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது தான். சிறை பணி மிகவும் கடினமானப் பணியாகும். ஏழைகள், ஆதரவற்றோர், கொடுங்குற்றவாளிகள் பலர் சிறையில் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் பணிக்கு தொழில் முறையில் பயிற்சி பெறுவது முக்கியம். இதுதான் முதல் முறை டெல்லியிலிருந்து சிறை அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சி பெறுவது. நீங்கள் இங்கே கற்றுக்கொண்டதை டெல்லி சிறையில் அமல்படுத்த வேண்டும். நெல்சன் மண்டேலா கூறியதுபோல் ஒரு சிறைச்சாலைக்கு சென்று பார்த்தால் அந்த நாட்டின் நாகரீகத்தை அறிந்து கொள்ள முடியும்.

நீங்கள் உங்கள் சிறைச்சாலையை சரியாக நடத்த வேண்டும். நாம் அனைவரும் சிறைக்கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும். சில நேரங்களில் நமக்கு சிறையில் வசதிகள் குறைவாக இருக்கக்கூடும். நம்மிடமுள்ள குறைபட்ட வசதியை கொண்டு நம்மால் முடிந்த அளவுக்கு முயன்று சிறைக்கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி சொன்னது போல குற்றம் என்பது ஒருவகை நோய். குற்றவாளிகளை நோயாளிகளாகக் கருத வேண்டும். சிறை அதிகாரிகள் சமூக மருத்துவர்களாகச் செயல்பட்டு சிறைக்கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அவர், சிறை அலுவலர்கள் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று ஏற்றுக்கொண்டார். இதில் ஆப்கா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!