கால்நடைகள் வரத்து இல்லை: வெறிச்சோடியது பொய்கை மாட்டுச்சந்தை
மாடுகள் வரத்து குறைந்ததால் களையிழந்த பொய்கை மாட்டு சந்தை
தமிழகத்தில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் பொய்கை மாட்டுச் சந்தை குறிப்பிடத்தக்க ஒன்று. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் , ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் காளைகள், எருமைகள், கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் என ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும் .
கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை நடைபெறும் இந்த சந்தை ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது . தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வு காரணமாக பொய்கை மாட்டுச்சந்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி பொய்கை சந்தை களைக்கட்டியது. ஆனால் சமூக இடைவெளியின்றி, கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் கூட்டம் அதிகளவில் சேர்ந்ததால் விதிகள் மீறப்பட்டதாக கூறி கடந்த வாரம் பொய்கை மாட்டுச் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கில் மேலும் அறிவிக்கப்பட்ட தளர்வை தொடர்ந்து இன்று மீண்டும் பொய்கை மாட்டுச் சந்தை திறக்கப்பட்டது. ஆனால் சரியான தகவல் கிடைக்காததால் மாடுகள் வரத்து மிக குறைந்தளவே இருந்தது. மாடுகளை கொண்டு வந்தவர்களில் பலரும் கடந்த வார அனுபவத்தால் சந்தைக்கு வெளியிலேயே நின்று விட்டு காலை 9 மணிக்கு மேல் திரும்பி சென்று விட்டனர். இதனால் பொய்கை மாட்டுச்சந்தை களையிழந்து காணப்பட்டது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர் .
இது தொடர்பாக பொய்கையை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, 'இந்த வார கால்நடை சந்தைக்கு 30 சதவீதம் கூட கால்நடைகள் வரவில்லை . இதனால் வர்த்தகம் என்பது 10 சதவீதம் கூட இருக்காது . இந்த நிலை வரும் வாரங்களில் மாறும் என எதிர்பார்க்கிறோம் ' என்றனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu