வேலூரில் பணப்பட்டுவாடா: திமுக, அதிமுக இடையே அண்டர்ஸ்டாண்டிங்
வேலுார் மாநகராட்சி தேர்தல் வரும் 19ல் நடக்கிறது. இங்குள்ள 60 வார்டுகளில் இரண்டு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 58 வார்டுகளில் 505 பேர் போட்டியிடுகின்றனர். நாளை மாலை 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், பணம் பட்டுவாடா செய்வது நேற்று இரவு 7:00 மணிக்கு தொடங்கி விடிய, விடிய நடந்தது.
தி.மு.க., அ.தி.மு.க., நேரடியாக மோதும் 40 வார்டுகளில், 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை பணம் கொடுத்தனர். இது போக எலெக்ட்ரிக் ஸ்டவ், புடவைகள், மொபைல் போன், வெள்ளி கொலுசு என ஏதாவது ஒன்றும் கொடுக்கப்பட்டது.
இதற்கான பட்டியலை எடுத்துக் கொண்டு, வேட்பாளர்களின் ஆட்கள் வரும்போது, தங்களுக்கு தேவையான பொருளை சொல்லி விட்டால், மூன்று மணி நேரத்தில் அவர்களுக்கு பொருள் வந்து சேர்ந்து விடும். இதற்கான தகவல் அவர்கள் மொபைல் போனில் முன்கூட்டியே சொல்லி விடுகின்றனர். அந்தந்த தொகுதியில் போட்டியிடும், திமுக மற்றும் வேட்பாளர்கள் தங்கள் பலத்தை பொறுத்து பணத்தை வாரி இறைக்கின்றனர்.
பணப்பட்டுவாடா நடப்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் கட்சியினரிடம், உங்களுக்குள் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு புகார் வந்தால், வழக்கு போடுவோம் என்று கூறிவிட்டனர். இதனால், சத்தமில்லாமல், டார்ச் லைட் வெளிச்சத்தில் விடிய, விடிய பணம் பட்டுவாடா வேலுாரில் 58 வார்டுகளிலும் நடந்து முடிந்துள்ளது.
இது குறித்து வேட்பாளர் தரப்பில் கேட்டதற்கு, 70 சதவீதம் கொடுத்து விட்டோம், மற்றவர்களை கண்டுபிடித்து பணத்தை கொடுக்கும் பணியில் தனி குழு சென்றுள்ளது என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu