வேலூரில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
ஓட்டல்களில் சுகாதாரமான முறையில் உணவு விற்பனை செய்யப்படுகிறதா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
வேலூர் ஆற்காடு சாலை, காந்திரோடு பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார்கள் சென்றது. அவரது உத்தரவின் பேரில் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கந்தவேல், ராஜேஷ் ஆகியோர் வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள ஓட்டல், டீக்கடைகள், ஜூஸ், ஐஸ்கிரீம் மற்றும் பெட்டிக்கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது சுகாதாரம் இல்லாமல் இருந்த 4 கடைகளுக்கு நோட்டீஸ் அளித்தனர். மேலும் சுகாதாரமற்ற உணவு வைத்திருந்ததாக 2 ஓட்டல்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஒரு ஓட்டலில் பழைய மீன் மற்றும் கோழி இறைச்சிகள் இருந்தது. சுமார் 10 கிலோ இறைச்சி, தரமற்ற உணவு மசாலா வகைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும் அங்கிருந்த டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து 2 கிலோ கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தரமான உணவுகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu