அமர்தியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சாலை அடித்துச் செல்லப்பட்டது
அமர்தி அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலை
மழைக்காலங்களில் அமிர்தி நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அமிர்தியில் மழை நீர் செல்லும் ஆற்றை கடந்துசெல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அமிர்தி, பாலப்பிராம்பட்டு, நம்மியம்பட்டு, வெள்ளியூர், தானிமரத்தூர், நெக்கினி, கொலையம், பாலாம்பட்டு உள்ளிட்ட சுமார் 10-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் காட்டாற்றை கடந்து செல்ல வேண்டும்.
கடந்த ஆண்டு நிவர் புயல் காரணமாக அமிர்தி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழைய தரைப்பாலம் சேதமடைந்தது. இதனையடுத்து அங்கு உயர்மட்ட மேம்பாலம் கடந்த 6 மாதங்களாக, திருவண்ணாமலை மாவட்ட வனத்துறையினரால் கட்டப்பட்டு வருகிறது. மேம்பாலம் கட்டப்படுவதால் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்ல தற்காலிகமான சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று வேலூர், கணியம்பாடி, அமிர்தி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக மலை கிராமங்களிலிருந்து வந்த மழை நீர் அமிர்தி நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. அளவுக்கு அதிகமாக ஆற்றில் மழைநீர் வந்ததால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலை முற்றிலுமாக அடித்து செல்லப்பட்டது.
இதனால் நம்மியம்பட்டு, நெக்கினி, கொலையம், பாலாம்பட்டு, அமிர்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. பாதை இல்லாததால் பொதுமக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக பாதையை சரிசெய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளம் குறையிததால், சாலை சீரமைப்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது மக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்காமல் இருக்க வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜவ்வாது மலை தொடரில் பெய்த கனமழை காரணமாக அமிர்தி, நாகநதி, கமண்டல நதி, கீழ்அரம்பட்டு நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தொடர்ந்து மழை நீர் ஓடுவதால் சிங்கிரிகோவில் பகுதியில் கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிகிறது. மேலும் கீழ்அரசம்பட்டு, நாகநதி, அமிர்தி உள்ளிட்ட பகுதியில் மழையின் காரணமாக வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
ஆறுகள் மற்றும் கால்வாய்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொது மக்கள் யாரும் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu