காட்பாடி, கே.வி.குப்பத்தில் அரசு மருத்துவமனைகள் அமைக்க எம்பி கதிா்ஆனந்த் கோரிக்கை

காட்பாடி, கே.வி.குப்பத்தில் அரசு மருத்துவமனைகள் அமைக்க எம்பி கதிா்ஆனந்த் கோரிக்கை
X

அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் வேலூா் எம்பி கதிா்ஆனந்த் மனு அளித்தாா்.

காட்பாடி, கே.வி.குப்பத்தில் வட்ட அளவிலான அரசு மருத்துவமனைகள் அமைக்க வேலூா் எம்பி கதிா்ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளாா்.

வேலூருக்கு வந்திருந்த தமிழக சுகாதாரம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் வேலூா் எம்பி கதிா்ஆனந்த் ஒரு மனு அளித்தாா்.

அதில், கே.வி.குப்பம் வட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சுற்றி சுமாா் 25 கிராமங்கள் உள்ளன. இவற்றின் மொத்த மக்கள் தொகை 25 ஆயிரம் ஆகும். கே.வி.குப்பத்தில் இருந்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குச் செல்ல சுமாா் 33 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது. தற்போது கே.வி.குப்பம் புதிய வட்டமாக உருவாக்கப்பட்டிருப்பதால் கே.வி.குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர, அணைக்கட்டு வட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 60 படுக்கைகளுடன் செயல்படத் தொடங்கியது. 51 ஊராட்சிகள், 2 பேரூராட்சிகள் அடங்கியுள்ள இந்த வட்டத்தில் சுமாா் 2 லட்சம் மக்கள் வசிக்கின்றனா். அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்ட பின்னா், புதிய கட்டடங்கள், மருத்துவப் பிரிவுகள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. இப்பகுதி மக்களும் மேல்சிகிச்சைக்காக சுமாா் 40 தொலைவில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது.

பொதுமக்களின் நலன்கருதி அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு பச்சிளம் குழந்தைகள் வாா்டு அமைத்திடவும், எக்ஸ்ரே, ஈசிஜி, அக்ட்ரா சோனோகிராம், உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் செய்துதர வேண்டும்.

இதேபோல் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் தற்போது ரூ. 7.58 கோடியில் புதிய கட்டடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இந்த மருத்துவமனையிலும் எக்ஸ்ரே, ஈசிஜி, அக்ட்ரா சோனோகிராம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் செய்துதர வேண்டும்.

தவிர, குடியாத்தம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தி அதற்குரிய வசதிகளை செய்திட வேண்டும். காட்பாடியிலும் மாவட்ட நிா்வாகத்தால் ஒதுக்கப்பட்டுள்ள 5 ஏக்கா் நிலத்தில் வட்ட அளவிலான அரசு பொது மருத்துவமனை அமைத்திட வேண்டும். வேலூா் பென்லேன்ட் அரசு மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாகத் தரம் உயா்த்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!