வேலூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் சிறப்பு முகாம்கள் ரத்து

வேலூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் சிறப்பு முகாம்கள் ரத்து
X
இன்று தடுப்பூசிகள் வர உள்ளது. அவை வந்தவுடன் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை குறைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாநகராட்சியில் ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதைத்தவிர தினமும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 2 லட்சம் பேருக்கு முதல் டோஸ் மற்றும் 60 ஆயிரம் பேருக்கு 2-வது டோஸ் போடப்பட்டுள்ளது. அரசின் விழிப்புணர்வு காரணமாக தற்போது அதிகளவு இளைஞர்கள், இளம்பெண்கள் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

வேலூர் மாவட்டத்துக்கு கடந்த 11-ந் தேதி 4 ஆயிரம் கோவேக்சின் மருந்தும், 14-ந் தேதி 3 ஆயிரம் கோவிஷீல்டு மருந்தும் வந்தன. அவை சுகாதாரத்துறை சார்பில் ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களுக்கு பிரித்து வழங்கப்பட்டன. அவற்றில் குறைந்தளவு தடுப்பூசி மருந்துகளே நேற்று முன்தினம் கையிருப்பு இருந்தன.

இந்த நிலையில் நேற்று சிறப்பு முகாம்களில் மதிய வேளையில் தடுப்பூசி தீர்ந்து விட்டன. அதையடுத்து முகாம் ரத்து செய்யப்பட்டது. தடுப்பூசி வந்தவுடன் மீண்டும் முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனால் வேலூர் மாநகராட்சி சார்பில் ஜெயராம் செட்டி தெருவில் நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி போட காத்திருந்த ஏராளமான பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிறப்பு முகாமிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று முகாம் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதேபோன்று ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி போட சென்ற பொது மக்களும் ஏமாற்றத்துக்கு உள்ளாகினர். தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் 2-வது டோஸ் போட சென்ற பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

வேலூர் மாவட்டத்திற்கு இன்று (புதன்கிழமை) தடுப்பூசிகள் வர உள்ளது. அவை வந்தவுடன் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story