வேலூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பெற சிறப்பு முகாம்

வேலூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு  பெற சிறப்பு முகாம்
X
வேலூரில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

வேலூர் முத்து மண்டபம் டோபிகானா பகுதி கன்னிகாபுரம், தொரப்பாடி, கரிகிரி ஆகிய இடங்களில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்வதற்கான சிறப்பு முகாம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதேமில்லத் அரங்கத்தில் நடந்தது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வீடுகள் கேட்டு விண்ணப்பித்தனர். அதிகளவில் கூட்டம் இருந்ததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பம் வழங்கி சென்றனர்.கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக சத்துவாச்சாரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் இந்தியாவில் வேறு எங்கும் சொந்தமாக நிலமும் வீடும் இருக்கக்கூடாது.

பயனாளிகளின் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும்.குடியிருப்போர் நல சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து மாதம் ரூ.250 பராமரிப்பு தொகை செலுத்த வேண்டும் ஆகியவை விண்ணப்பிக்க தகுதிகளாகும்.

விண்ணப்பத்துடன் குடும்பத் தலைவர் மற்றும் தலைவி ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்கள் ஒப்படைக்க கோரி இருந்தனர்.

இன்று விண்ணப்பிக்க தவறியவர்கள் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பம் அளிக்கலாம் என தெரிவித்தனர்.

Tags

Next Story