சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் குறைக்கப்படும் : மத்திய அமைச்சரின் அறிவிப்பிற்கு தமிழக அமைச்சர் வரவேற்பு

சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் குறைக்கப்படும் : மத்திய அமைச்சரின் அறிவிப்பிற்கு தமிழக அமைச்சர் வரவேற்பு
X

வேலூரில் அமைச்சர் வேலு பேட்டியளித்தார்.

சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் குறைக்கப்படும் என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவிப்பிற்கு தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், 'சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுதோறும் திருத்தி அமைக்கப்படும். அதன்படி, பொது நிதி உதவித் திட்டத்தில் சுங்கச் சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளது. சில மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க முடிவு செய்துள்ளோம்.

நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றி, அதற்குப் பதிலாக கேமராக்கள் பொருத்துவதற்கு அரசு தயாராகி வருகிறது. அதற்குப் பிறகு, சுங்கச் சாவடியில் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் முடிவுக்கு வரும். இதன் மூலம் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் செல்லும் வாகனங்களில் செல்லும் வாகனங்களில் இருந்து சுங்கவரி தானாகவே வசூலிக்கப்படும்.

அரசு இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கேமராக்கள் மூலம் கட்டணம் வசூலிக்க நேரம் ஆகாது. இந்த புதிய முறை அமலுக்கு வந்த பிறகு வாகனங்கள் அதன் வேகத்தை குறைக்கவோ அல்லது எங்கும் நிறுத்த வேண்டியதோ இருக்காது.

பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் அத்தகைய தொழில்நுட்பம் மூலம், சுங்கச்சாவடிகளுக்கு இடையேயான தூரப் பிரச்னை தீரும். சோதனை முயற்சி மற்றும் சரிபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு செய்தியாளர்களிடம் கூறும்போது, 'மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் குறைக்கப்படும் என்று சொன்னதை நாங்கள் வரவேற்கிறோம்' என தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு டவுன், அப்துல்லா புரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஐ.டி.ஐ கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஐடிஐ மூலம் பல்வேறு துறைகள் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தமிழகத்தில் பொதுப்பணி துறை சார்பாக தமிழகத்தில் 69 புதிய ஐ.டி.ஐகளை 264.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கிராம சாலைகளை மேம்படுத்த 2,200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை நிலை நெடுஞ்சாலை சாலைக்கு ஏற்ப தரம் வேண்டும் என்பதுதான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் நோக்கம் ஆகும்.

திமுகவின் திராவிட மாடல் ஆட்சியை அனைத்து தரப்பு மக்களும் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய்யான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

தமிழகத்தில் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு முதல்வர் நிதி ஒதுக்கி உள்ளார். அதில் இடிக்க வேண்டிய பள்ளி கட்டிடத்தை இடித்து புதிதாக கட்டப்படும். பழுது நீக்க வேண்டிய பள்ளிக்கூடத்தை முறையாக பழுது நீக்குவோம். பள்ளி கட்டிடங்களை பொருத்தவரை முதல்வர் 100 சதவீதம் விழிப்புடன் இருக்கிறார்.

தமிழக சாலைகளை பொருத்தவரை 100 சதவீதம் தரம் வாய்ந்தவை. நாடாளுமன்றத்திலேயே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழக சாலைகளை பாராட்டி பேசி உள்ளார்.மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் குறைக்கப்படும் என்று சொன்னதை நாங்கள் வரவேற்கிறோம் என அமைச்சர் வேலு தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil