பதின்ம மாணவ, மாணவிகளுக்கு வேலூர் முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை
பயிலரங்கில் பேசும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி
வேலூர் மாவட்டம் கல்வியில் முதன்மை பெறவேண்டும் என்பதற்காக மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பயிலரங்கம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் ஜோதீஸ்வரபிள்ளை வரவேற்று பேசினார். ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன் தொகுப்புரையாற்றினார். திருக்குறள் இயக்க தலைவர் கவிமாமணி அறிவுச்சுடர், கல்வி உலகம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு, பள்ளி துணை ஆய்வாளர் அ.மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி பேசும்போது, வேலூர் மாவட்ட மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கி தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். தாய் தந்தை ஆகிய இருவரும் இரண்டு கண்கள். எனவே அவர்கள் சொல்படி தான் நீங்கள் நடக்க வேண்டும்.
தாய் என்பவள் போற்றத்தகுந்தவள், தான் கஷ்டப்பட்டாலும் தன் மகள், மகன் கஷ்டபடக்கூடாது என்று நினைப்பவள். நீங்கள் இப்போது பதின்ம வயதில் நாம் செய்வது சரியா தவறா என முடிவெடுக்க முடியாது. இப்போது உங்களுக்கு தெரியாது. நீங்கள் உங்களது தாய் மற்றும் தந்தையர் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.
நான் இன்று உங்கள் முன்னே மாவட்ட முதன்மைக்கல்வி அலுவராக நிற்கின்றேன் என்றால் அதற்கு எனது தாயாரும், தந்தையும் காரணம். எனது தந்தை கூறிய கருத்துக்களை கேட்டறிந்து, அதன் வழி நடந்ததன் விளைவாக இன்று நான் அதிகாரியாக உங்கள் முன் நிற்கிறேன்.
உங்களது வாழ்க்கை சிறப்பாக அமைய ஆசிரியர்கள் பாடுபடுகிறார்கள். அனைத்து மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பயிற்சி அளிக்கின்றனர் இதனை உணர்ந்து சிறப்பாக கல்வி பெற்று வாழ்க்கையில் உயர வேண்டும்.தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு ஆகிய மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்கள் மிக சிறந்த மாணவர்களாக முன்னேறலாம் என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu