பள்ளி செல்லா மாணவர்களை கண்டறியும் பணி: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தொடக்கம்
பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிய 6,700 குடியிருப்புகளில் 'சர்வே ஆப் மூலம் கணக்கெடுக்கும் பணி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தொடங்கியது
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி செல்லா மாணவர்களை கண்டறியும் வகையில் பிரத்யேக 'சர்வே ஆப்' மூலம் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பெண் குழந்தைகள், மூன்றாம் பாலின குழந்தைகள் ஆரம்பபள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே அதிக அளவில் இடை நின்று விடுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் ஆண்டு தோறும் நடைபெறும் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணியை இந்த ஆண்டு, கூடுதல் கவனத்துடன் ' சர்வே ஆப் ' மூலம் கணக்கெடுப்பு செய்ய அறிவுறுத்தியுள்ளது . அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஈடுபட்டுள்ளனர் . இந்த பணி வரும் 31 ம்தேதி வரை நடைபெறவுள்ளது .
வேலூர் மாவட்டத்தில் 2,169 குடியிருப்பு பகுதியிலும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,058 குடியிருப்பு பகுதிகளிலும், ராணிப் பேட்டை மாவட்டத்தில் 2,503 குடியிருப்புகளிலும் என மொத்தம் 6,730 குடியிருப்புகளில் நேரடியாக சென்று ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் ஆகியோர் பள்ளி செல்லா மாணவர்கள் பற்றி கணக் கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக சர்வே ஆப் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று பள்ளி செல்லா மாணவர்களின் விவரங்களை பதிவேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியில் மொத்தம் 220 பேர் ஈடுபட்டுள்ளனர். பள்ளி செல்லா குழந்தைகள் இருந்தால் உடனடியாக அந்த மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் படிக்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu