வேலூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்
வேலூர் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலமாக இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் 934 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரத்து 345 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் இது மட்டுமல்லாமல் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து பணி மற்றும் வியாபார நிமித்தமாக வேலூர் மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணியில் பொது சுகாதாரத் துறை, கல்வித் துறை, சமூக நலத் துறை, வருவாய்த் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்பட 3,548 பணியாளர்களும் மேற்பார்வையிட 116 பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேவையான சொட்டு மருந்துகள் எடுத்துச் செல்லவும் வேலூர் மாவட்டம் முழுவதும் பிற துறை மற்றும் சுகாதாரத் துறை வாகனங்கள் உட்பட 56 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
முகாமிற்கு தேவையான போலியோ சொட்டு மருந்துகள், பேனர்கள், போஸ்டர்கள், அடையாள மை பேனாக்கள் மற்றும் முகாமிற்கு தேவையான அனைத்து பொருட்களும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் இருந்து பெறப்பட்டு முகாம் நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே வழக்கமாக போடும் போலியோ சொட்டு மருந்து எத்தனை முறை போட்டிருந்தாலும் இம்முறையும் அவசியம் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu