வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் ரத்து

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் ரத்து
X
வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்றும் , நாளையும் ரத்து செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சிறப்பு முகாம்கள் இன்றும் , நாளையும் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க 18 முதல் 44 வயது வரையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முதல் மற்றும் 2 ம் கட்ட தடுப்பூசிகள் ஆரம்பசுகாதார நிலையங்கள் , அரசு மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் தினமும் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மேலும் அனைத்து ஆரம்பசுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது. இவற்றில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் அதிகளவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தடுப்பூசியை வழங்காததால் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் இன்று நடக்கவிருந்த சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்பட்டது. இதையறியாமல் முகாம்கள் நடக்கும் பகுதிக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர் .

அதேபோல் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போட பொதுமக்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். எப்போது தடுப்பூசி போடப்படும்? என்பது குறித்து சுகாதாரத்துறை தெரிவிக்கவில்லை. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் , ' வேலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது . சென்னைக்கு தடுப்பூசி வந்தால் அடுத்த நாளே வேலூர் மாவட்டத்திற்கு வந்துவிடும். ஓரிரு நாட்களில் தடுப்பூசி வரும் என்று எதிர்பார்க்கிறோம். எவ்வளவு தடுப்பூசி வரும் என்பது தெரியவில்லை. மேலும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்றனர் .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!