அரசு பாதுகாப்பு இல்லத்தில் 6 சிறுவர்கள் தப்பியோட்டம்.. அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆலோசனை...
வேலூரில் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் இருந்து கடந்த 27 ஆம் தேதி 6 சிறார்கள் தப்பி ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளார்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் 8 கூர்நோக்கு இல்லங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது 36 குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலூரில் உள்ள அரசு பாதுகாப்பு இல்லத்தில் 6 பேர் தப்பி சென்றனர். வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு இல்லங்களிலும் சிறுவர்கள் தப்பி செல்லாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் உரிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பு இல்லங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் தப்பி சென்ற ஆறு சிறுவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தப்பி சென்றவர்கள் விரைவில் பிடிபடுவார்கள். அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வேலூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு பணநிரந்தரம் குறித்து ஆலோசனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu