சாலையில் கழிவுநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர்
வேலூர் அடுத்த அடுக்கம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட அ.கட்டுபடி கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை. பராமரிப்பின்றி பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது.
இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கிராமத்திற்கு வரவேண்டிய பேருந்தும் சரிவாக வருவதில்லை.
இதனால் பள்ளி மாணவர்கள், நோயாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று அங்கிருந்து பேருந்துகள் முலம் மற்ற இடத்திற்கு செல்கின்றனர்.
தற்போது தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டுள்ளது. இதில் அ.கட்டுப்படி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய், ஏரிக்கு செல்ல வழி இல்லாமல் பாதியில் நிற்கிறது. மேலும் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது.
கால்வாய் முடியும் இடத்தில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் சாலையில் கழிவு நீர் குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடியே கடந்து செல்கின்றனர்.
தற்போது கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் கழிவுநீருடன் கலந்த மழை நீர் ஆதிகளவில் சாலையில் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வயதான முதியோர் மற்றும் மாணவர்கள் கழிவு நீர் தேங்கிய இடத்தில் விழுந்து காயங்களுடன் செல்வது தொடர்கதையாக உள்ளது.
எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் முழுமையாக சீரமைப்பதோடு, கழிவுநீர் தேங்காமல் கடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu