இயந்திரத்தில் பசையை ஒட்டி ஏடிஎம் கார்டுகளை நூதனமாக திருடியவர் கைது

கைதான வாலிபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஏடிஎம் கார்டுகள்
வேலூர், காட்பாடி, காந்திநகர், திருவலம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள 30 ஏடிஎம் எந்திரங்களில் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் இடத்தில் இருந்த ஒட்டும் பசை காரணமாக பணம் எடுப்பவர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வந்தனர். மர்ம நபர் ஏடிஎம் இயந்திரத்தில் ஒட்டும் பசையை தடவி செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசாரிடம் வங்கி மேலாளர்கள் புகார் அளித்தனர். தொடர்ந்து மர்மநபர் ஏடிஎம் எஇயதிரங்களில் பசையை தடவும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் அருகே ஏடிஎம் மைய சிசிடிவி காட்சியில் உள்ளது போன்ற வாலிபர் போல் பைக்கில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரை தனிப்பிரிவு போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் பெங்களூர் ஒயிட் கார்டன் பகுதியை சேர்ந்த திம்மராயப்பா (37) என்பது தெரியவந்தது. மேலும் வெவ்வேறு இடங்களில் 30 ஏடிஎம் மையங்களில் ஒட்டும் பசையை தடவி நூதனமாக திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
திருட்டு எப்படி நடந்தது?
கைதான வாலிபர் ஏடிஎம் இயந்திரத்தில் வாடிக்கையாளர் இல்லாத நேரத்தில் ஏடிஎம் கார்டை நுழைக்கும் இடத்தில் ஃபெவிக்விக் பசையை தடவி விட்டு அருகிலேயே உள்ள மற்றொரு ஏடிஎம் இயந்திரத்தில் நின்று கொண்டு பணம் எடுப்பது போல் நடித்துக் கொண்டிருப்பார்.
அப்போது வாடிக்கையாளர் ஏடிஎம் கார்டை இயந்திரத்தில் நுழைத்து பணம் எடுக்க ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்வதை அருகில் இருந்து பார்த்து கொள்வார். வாடிக்கையாளர் பணம் எடுத்த உடன் ஏடிஎம் கார்டு எடுக்க முயலும் போது கார்டு இயந்திரத்தில் உள்ள பசை காரணமாக ஒட்டிக்கொள்ளும். கார்டை எடுக்க முடியாமல் வாடிக்கையாளர் வங்கியில் புகார் அளிக்க சென்றுவிடுவார்.
இதை பயன்படுத்தும் மர்ம நபர் கம்பியின் மூலமாக ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு வேறொரு ஏடிஎம் மையத்துக்கு சென்று ரகசிய எண்ணை போட்டு பணத்தை எடுத்து செல்வார்.
இதுபோன்று 30 ஏடிஎம் மையங்களில் சுமார் 44 கார்டுகளை பயன்படுத்தி பல ஆயிரம் ரூபாயை திருடியுள்ளார். அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர் பெங்களூரிலிருந்து வேலூருக்கு பைக்கில் வந்து வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu