பணிக்கு வராத மருத்துவர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை

பணிக்கு வராத மருத்துவர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை
X
அமைச்சர் துரைமுருகன் (பைல் படம்)
சரியாக பணிக்கு வராத அரசு மருத்துவர்களை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்

பொன்னையில் கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் ஊரடங்கால் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.

இதனையடுத்து, பேசிய அமைச்சர் துரைமுருகன், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத ஆள்கள் தமிழ்நாட்டில் மிக குறைவு. எனக்குக்கூட தொற்று ஏற்பட்டது. நான் தடுப்பூசி போட்டுகொண்டதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஆனால், இதையும் தாண்டி மூன்றாவது அலை வருவதாகக் கூறுகிறார்கள். அது எப்படி இருக்கும் என்று தெரியாது.மக்களுக்கு நோய்கள் வராமல் தடுக்க அரசு மருத்துவ உதவிகளைச் செய்கிறது. ஆனால், நோய் வருபவர்களைத் தேடி மருத்துவர்கள் செல்லுவதற்குதான் 'மக்களை தேடி மருத்துவம்' என்ற புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே, தடுப்பூசியை அனைவரும் போட்டுகொள்ள வேண்டும். பொன்னை பகுதியைப் பொறுத்தவரையில் இரண்டு விஷயங்களை சொன்னேன். ஒன்று, கல்லூரி. அதை இந்த ஆண்டு கொண்டு வருவேன். மருத்துவமனையை ஏற்படுத்திவிட்டேன். இது மட்டும் இல்லாமல் நான் கட்டிய மேம்பாலம் 50 ஆண்டுகள் பழையதாகிவிட்டதால், பொன்னையில் புதியதாக மேம்பாலம் அமைத்து தந்துள்ளேன்.

பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரியாக மருத்துவர்கள் பணிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. முறையாக பணி செய்யுங்கள் இல்லையென்றால் இடமாற்றம் செய்யமாட்டேன், பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுவேன். புகார் என்றால் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறுங்கள் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்