பறிமுதல் செய்த பணத்தை தனது வருமானத்தில் சேர்க்கக்கூடாது: திமுக எம்.பி மேல்முறையீடு
எம்.பி கதிர் ஆனந்த்
2019 மக்களவைத் தேர்தலின்போது வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்ட ரூ. 11.48 கோடியை திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் வருமானத்தில் சேர்ப்பதை எதிர்த்து மேல்முறையீடு செய்து மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலின்போது காட்பாடியில் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்துக்கு நெருக்கமானவர்களாக கூறப்பட்டவர்கள் வீட்டில் இருந்து ரூ. 11.48 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். அதை 2019-20-ம் ஆண்டில் கதிர் ஆனந்தின் வருமானத்தில் சேர்த்த வருமான வரித்துறை அவரை வட்டியுடன் வரி செலுத்த வேண்டும் என்று கூறியது.
ரூ. 11.48 கோடியை தனது வருமானத்தில் சேர்த்த வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து கதிர் ஆனந்த் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து திமுக எம்.பி கதிர் ஆனந்த் இரண்டு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி சி.சரவணன், பணம் தனக்கு சொந்தமானது இல்லை என்று அவர் கூறியதை ஏற்க மறுத்துவிட்டார். வருமானவரித் துறை சேகரித்த ஆதாரங்களில் மனுதாரருக்கு எதிராக பெரும்பாலான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய நீதிபதி, அந்த பணம் மனுதாரருக்கு சொந்தமானது என்பதற்கான சூழ்நிலை அதிகமாக உள்ளது பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் மனுதாரரின் துரைமுருகன் கல்வி அறக்கட்டளை நடத்தும் கல்லூரிகள் தொடர்பான சில ஆவணங்களும் கிடைத்திருப்பது, அந்த பணம் அவருடையதுதான் என்பதைக் காட்டுகிறது. அந்த பணம் மனுதாரருக்கு சொந்தமானது, ஆனால், அது மனுதாரரால் வருமான வரியில் அவருடைய வருமானத்தில் காட்டப்படவில்லை என்று கூறினார்.
நீதிபதி இந்த மனுக்களை தள்ளுபடி செய்தபோதிலும், 30 நாட்களுக்குள் மேன்முறையீட்டு ஆணையர் முன், இந்த உத்தரவுக்கு எதிராக சட்டரீதியான மேல்முறையீடு செய்வதற்கு கதிர் ஆனந்த்துக்கு நீதிபதி அனுமதி அளித்தார். அதுவரை பணத்தை மீட்கும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu