முன்பு இருந்தவர்களை விட ஒரு படி மேலாக நல்லது செய்வேன்- கே.வி.குப்பம் வேட்பாளர் ஜெகன் மூர்த்தி

முன்பு இருந்தவர்களை விட ஒரு படி மேலாக நல்லது செய்வேன்- கே.வி.குப்பம் வேட்பாளர்  ஜெகன் மூர்த்தி
X
கே.வி.குப்பத்தில் நடந்த பிரச்சனை குறித்து அதிமுக தலைமையில் பேசி தீர்வு எட்டப்பட்டுவிட்டது. இத் தொகுதி மக்களுக்கு முன்பு இருந்தவர்களை விட ஒரு படி மேலாக நான் நல்லது செய்வேன் என்று கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் ஜெகன் மூர்த்தி கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியின் வேட்பாளராக புரட்சி பாரதம் கட்சி தலைவரான பூவை ஜெகன் மூர்த்தி போட்டியிடுகிறார். இத்தொகுதியை கூட்டணி கட்சியினருக்கு வழங்க கூடாது என்று கடந்த 3 நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் இன்று கே.வி. குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பா.ம.க சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இத்தொகுதியின் வேட்பாளரான பூவை ஜெகன் மூர்த்தியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும், பாமகவினர் இவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பாமக நிற்வாகிகள் இக்கூட்டத்தில் பேசினர். இதில் பாமகவின் வேலூர் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.டி சண்முகம் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பூவை ஜெகன் மூர்த்தி, அதிமுகவுடைய கூட்டணி கட்சி வேட்பாளராகிய நான் இத்தொகுதி மக்களுக்கு, இதற்கு முன்பாக இருந்த உறுப்பினர்கள் செய்ததை விட ஒரு படி மேலாக நல்லது செய்வேன். எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று மக்களை சந்தித்து பேசி, அவற்றை எல்லாம் நிறைவேற்ற முயற்சி செய்வேன். மேலும் கட்சியின் சாதாரண வேட்பாளராக இல்லாமல் கூட்டணி கட்சியின் தலைவராக இருக்க கூடிய நான் கண்டிப்பாக முதல்வரிடம் எடுத்து சொல்லி இத்தொகுதியை முன்னேற்ற பாதையில் எடுத்து சென்று வேலூரின் முதல் தொகுதியாக உருவாக்குவேன் என்றார்.

தொடர்ந்து அதிமுகவினர் அதிருப்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்சி தலைமை அழைத்து சமாதானம் செய்து விட்டனர், எனவே தற்போது அந்த பிரச்சனை இல்லை. நாங்களும் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதனை சந்தித்து பேசினோம். அதற்கு "நிச்சயமாக நானும் உங்களுடன் இணைந்து பணி செய்து கட்சியை வெற்றி பெற செய்வேன்" என்று கூறியதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி அனுமதி இன்றி நடந்ததாக கூறி தேர்தல் பறக்கும் படையினர் கூட்டத்தை கலைக்கும்படி கூறியதை தொடர்ந்து விரைவாக கூட்டம் கலைக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!