கே.வி.குப்பம் அருகே போலி பெட்ரோல் , டீசல் தயாரிக்கும் ஆலை
கே .வி.குப்பம் அருகே போலி பெட்ரோல் , டீசல் தயாரிக்கும் ஆலையை பெட்ரோலிய வணிகர் சங்கத்தினர் கண்டு பிடித்து போலீசில் புகார் செய்தனர் . அதன்பேரில் லாரிகள், ரசாயனம் , இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது .
வேலூர் மாவட்டம் , கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி வேலம்பட்டு கேட் பகுதியில் கருணாகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே ஒதுக்குப்புறமாக கட்டிடம் ஒன்று உள்ளது . இதனை, திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தனியார் போர்வெல் நடத்துபவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த இடத்தில் அவர்கள் போலி பெட்ரோல், டீசல் தயாரிப்பதாகவும், தமிழகம், கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளில் இதுபோன்று தயாரிக்கப்படும் போலி டீசல் களை ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனங்களுக்கும், லோக்கல் வாகனங்களுக்கும் சப்ளை செய்வதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த லத்தேரி பெட்ரோல் பங்க் உரிமையாளரும் வேலூர் மாவட்ட பெட்ரோலிய வணிகர் சங்க செயலாளருமான சந்திரசேகரன், சங்க நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார் . அப்போது , அங்குள்ள கட்டிடத்தில் பெட்ரோல் தயாரிப்பின் போது மீதமாகும் கழிவு பொருட்களை வைத்து சில வேதியியல் பொருட் களை சேர்த்து போலியாக பெட்ரோல் டீசல் தயாரித்து சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரிய வந்தது .
மேலும் அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்க பயன்படும் ரசாயனம் மற்றும் இயந்திரங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, காவல்துறையில் புகார் அளித்தனர். அங்கு வந்த காவல்துறையினர், லாரிகள், ரசாயனம், இயந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து டிஎஸ்பி ரவிச்சந்திரன் கூறுகையில் கைப்பற்றப்பட்ட எரிபொருள் மிக்ஸ்டு மினரல் ஹைட்ரோ கார்பன் ஆகும் . அதை பயன்படுத்த எந்த வகையான பாதுகாப்புகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu