குடியாத்தம் அருகே 2 கிராமங்களில் மீண்டும் நிலநடுக்கம்
குடியாத்தம் அருகே 2 கிராமங்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மூலக்கொல்லை, மாரியம்மன்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி மற்றும் 25-ந் தேதி இரவு நேரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் நவம்பர் மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அதிகாலையில் தட்டப்பாறை ஊராட்சி மீனூர் கொல்லிமேடு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் மாலை 3.15 மணி அளவில் மீண்டும் தட்டப்பாறையை அடுத்த மீனூர் கொல்லிமேடு பகுதியில் சில வினாடிகள் பெருத்த சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீட்டின் பரண் மீது இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். இரண்டு மாதங்களில் இப்பகுதியில் பல முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
அதேபோல் குடியாத்தத்தை அடுத்த பரதராமி டி.பி.பாளையம் ஊராட்சி அரிகவாரிபல்லி கிராம பகுதியிலும் மாலை 3.15 மணிஅளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு விட்டை விட்டு வெளியே வந்து பாதுகாப்பாக நின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.டி.மோட்டூர், கமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுவருவதால் கிராம மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu