இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் ரூ.1.50 லட்சம் மோசடி
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மஜித் தெருவை சேர்ந்தவர் ரியாஸ் அஹமத் (வயது 27). இவர் இணையதளத்தில் தனியார் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில், வாடிக்கையாளர் செலுத்தும் தொகைக்கு இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ரியாஸ் அஹமத் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
அவரிடம் பேசிய அந்த நிறுவனத்தினர், செலுத்தும் தொகைக்கு ஏற்ப வட்டியுடன் சேர்த்து இரட்டிப்பு தொகை கிடைக்கும் என்றும், இந்த தொகை பெற வேண்டும் என்றால் உங்களது மொபைலில் எங்களுடைய செயலியை (ஆப்) பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
அதன்படி ரியாஸ் அஹமத் அந்த நிறுவனத்தின் மொபைல் செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து அதில் புதிய கணக்கை தொடங்கி முதல் கட்டமாக ரூ.500 செலுத்தினார். சில நாட்கள் கழித்து 516 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என அந்த ஆப்-ல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தொகையை பெற்றுக்கொண்டார்.
பின்னர் அந்த நிறுவனத்தினர், செலுத்தப்படும் தொகைக்கு ஏற்ப அதிக பணம் கிடைக்க வேண்டும் என்றால் செலுத்தும் தொகை அதிகமாக இருக்க வேண்டும் என்று இதை நம்பிய ரியாஸ் அஹமத் பல்வேறு தவணைகளாக ரூ.55 ஆயிரம் செலுத்தியுள்ளார். 10 நாட்கள் கழித்து ரூ.80 ஆயிரம் பெற்றுக்கொள்ளும்படி அந்த ஆப்-ல் காண்பித்தது. அந்த தொகையை அவர் பெற முயன்றார்.
ஆனால் அவரது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. இதனால் ரியாஸ் அஹமத் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, கூடுதல் தொகை செலுத்த வேண்டும். மேலும், நீங்கள் பலரை அறிமுகப்படுத்தி அவர்களும் பணம் செலுத்தினால் கூடுதலாக பணம் கிடைக்கும் என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ரியாஸ்அஹமத் தன்னுடைய உறவினர் மற்றும் நண்பர் ஒருவரிடம் தெரிவித்து, அவர்கள் இருவரும் அந்த ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து ரூ.95 ஆயிரத்தை செலுத்தினர். ஆனால் சில நாட்கள் கழித்து கூடுதல் தொகையும், அவர்கள் செலுத்திய தொகையும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரியாஸ் அஹமத் உள்பட 3 பேரும் அந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர்களால் அது முடியவில்லை. அப்போது தான் அந்த நிறுவனம் போலியானது என்பது அவர்களுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ரியாஸ் அஹமத் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu