குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகத்தை வட்டாட்சியர் அலுவகத்தில் அமைக்க கோரிக்கை
குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 1885-ம் ஆண்டிலிருந்து இயங்கி வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் புதிதாக கட்டும் பணி தொடங்கப்பட்டது. அதற்காக அதன் அருகில் இருந்த சார்பதிவாளர் அலுவலகம் இடிக்கப்பட்டு தற்காலிகமாக தற்போது குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இதன் அருகிலேயே பல ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. இந்த இடத்தில் குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகம் கட்ட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குடியாத்தம் முன்னாள் நகர மன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.எம். தேவராஜ் முதலமைச்சர், பத்திரபதிவுத்துறை அமைச்சர், பத்திர பதிவுத்துறை தலைவர், கலெக்டர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சுமார் 150 ஆண்டுகளாக குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வந்தது. சார்பதிவாளர் அலுவலகம் வந்து செல்லும் பொதுமக்கள், வயதான பெண்கள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு நகரின் மையப்பகுதியில் இருந்ததால் ஏதுவாக அமைந்திருந்தது.
இந்நிலையில் தனிநபர் ஒருவர் குடியாத்தத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டுக்கு அருகே உள்ள தனது சொந்த இடத்தில் 21 சென்ட் நிலத்தை தானமாக சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த இடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் வந்தால் சுற்றுப்பகுதியில் உள்ள வீட்டுமனைகள் அதிக விலைக்கு விற்கும் நிலை ஏற்படும். அதனால் அப்பகுதியில் சார்பதிவாளர் அமைக்க இலவசமாக இடத்தை வழங்கயுள்ளார். அதனை ஏற்க கூடாது.
குடியாத்தம் நகர மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு மிகவும் ஏற்ற வகையில் நகரின் மையப் பகுதியில் தாலுகா அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பில்லாத இடமாகவும் ஒதுக்குப்புறமாக உள்ள பகுதிகளில் சார்பதிவாளர் அலுவலகத்தை அமைக்கக் கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu