குடியாத்தம் அருகே கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணிகள்
கிடப்பில் போடப்பட்ட கூடநகரம் ரயில்வே மேம்பால பணிகள்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கூடநகரத்தில் ரயில்வே கேட் உள்ளது. இதனை கடந்து தான் அணங்காநல்லூர், மோட்டூர், சிங்கல்பாடி, மேல்ஆலத்தூர், கூடநகரம், கல்மடுகு, காக்காதோப்பு, தட்டாங்குட்டை, ராமாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு மக்கள் சென்று வந்தனர். ரயில் செல்லும் போது ரயில்வே கேட் பூட்டப்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. எனவே கூடநகரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க இப்பகுதி கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து மேம்பாலம் கட்ட முடிவு செய்து. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. கடந்த 2015-ம் ஆண்டு மேம்பாலம் கட்டுவதற்காக கூடநகரம் ரயில்வே கேட் மூடப்பட்டது. அதன் பின்னர் ரயில்வே துறை சார்பில் கூடநகரம் ரயில்வே கேட் அமைந்திருந்த பகுதியில் மட்டும் மேம்பாலம் கட்டப்பட்டது. தொடர்ச்சியாக மேம்பால பணிகள் நடைபெறவில்லை.
கூடநகரம் ரயில்வே மேம்பாலத்தை கட்டித்தர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.
தேர்தலின் போது வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர்களிடம் கூடநகரம் ரயில்வே மேம்பாலத்தை கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக வேட்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் இதுநாள் வரை மேம்பாலம் கட்டப்படவில்லை.
மேம்பாலம் கட்டப்படாததாலும், ரயில்வே கேட் மூடப்பட்டதாலும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் குடியாத்தம் பகுதிக்கும், சுற்றுப்புற பகுதிக்கும் செல்ல ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். சில நேரங்களில் மாணவர்கள் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில்கள் வந்துவிடுவதால் சைக்கிளை தண்டவாளத்தில் போட்டு விட்டு ஓடிய சம்பவங்களும் நடந்துள்ளது. தண்டவாளத்தை கடக்கும்போது சிலர் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து கூடநகரம் ஊராட்சி மன்ற தலைவர் பி.கே.குமரன் கூறுகையில், கூடநகரம் ரயில்வே கேட்டை தாண்டி பார்வதியாபுரம், பூசாரிப்பட்டி, ஸ்ரீராமநாதபுரம், முஸ்லிம்பூர், பூக்காரான்பட்டி, முனிசாமி பட்டி, அருந்ததி காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. ரயில்வே கேட் மூடப்பட்டதால் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். அத்யாவசிய பணிகளுக்காக செல்ல வேண்டும் எனில் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.
இல்லை என்றால் சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு ஊராட்சி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், வங்கி மற்றும் மின்வாரிய அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கு செல்ல வேண்டும்.
விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். முக்கியமாக மாணவர்களும், நோயாளிகளும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் மேல்ஆலத்தூர் வழியாக சுற்றி வரும்போது ரயில்வே தரைபாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துடன் ரயில்வே தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர். கூடநகரம் பகுதியை சேர்ந்த யாராவது இறந்துவிட்டால் ரயில்வே தண்டவாளத்தின் மறுபக்கத்தில் உள்ள சுடுகாட்டில்தான் அடக்கம் செய்ய வேண்டும். இதனால் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து சுடுகாட்டுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது என்றார்.
தண்டவாளத்தை கடக்காமல் மாற்றுப்பாதையில் சென்றால் 20 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை தாமதமாக செல்ல வேண்டி உள்ளதால், ஆபத்தையும் பொருட்படுத்தாமல் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்
இது குறித்து அதிகார்கள் கூறுகையில், தற்போது 28 விவசாயிகளிடம் இருந்து ரயில்வே மேம்பாலத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கு இழப்பீடு தொகையாக ரூ.4 கோடியே 39 லட்சம் வழங்கப்பட்டு விட்டது. இந்த ரயில்வே மேம்பாலம் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அமையவுள்ளது. ரூ.37 கோடியே 40 லட்சத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட உள்ளது. விரைவில் இதற்கான டெண்டர் விடும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. டெண்டர் விடப்பட்டதும் 18 மாதங்களில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu