குடியாத்தம் அருகே ஆதரவின்றி தவித்த சிறுவன் காப்பகத்தில் ஒப்படைப்பு.
விபத்தில் தந்தை படுகாயம் அடைந்து ஆதரவின்றி தவித்ததால், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மொபட் மீது பைக் மோதி தந்தை படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் . இதனால் ஆதரவின்றி தவித்த சிறுவனை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் இருந்து பசுமாத்தூர் வழியாக நேற்றிரவு மொபட்டில் ஒருவர் தனது 4 வயது மகனுடன் சென்றார். குடியாத்தம் அடுத்த ஐராபுரம் பாலம் அருகே சென்ற போது எதிரே வந்த பைக் மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் சென்றவரும் , குழந்தையும் கீழே விழுந்தனர். இதில் மொபட் ஓட்டியவர் தலையில் படுகாயமடைந்து மயங்கினார்.
இதைக்கண்ட பொதுமக்கள் படுகாயம் அடைந் தவரையும், சிறுவனையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர் . அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தனியாக தவித்த சிறுவனை, குடியாத்தம் பகுதியை சேர்ந்த கோபி என்பவர் மீட்டு டவுன் போலீசில் ஒப்படைத்தார். சிறுவனிடம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் விசாரணை நடத்திய போது, சிறுவன் பெயர் நிதிஷ் என்பதும், அவரது தந்தை ரமேஷ் , தாயார் பெயர் ராஜேஸ்வரி என்பதும் தெரிந்தது . இருப்பினும் ஊர் பெயரை சரியாக சொல்லத் தெரியவில்லை. இதையடுத்து இரவு சிறுவனை பாதுகாப்பாக வைத்திருந்த போலீசார் இன்று காட்பாடியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபத்துக்குள்ளானவர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையில் உள்ளதால் அவரது விலாசம் பற்றிய விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu