பேரணாம்பட்டு பகுதியில் வீடு இடிந்து 9 பேர் உயிரிழப்பு

பேரணாம்பட்டு பகுதியில் வீடு இடிந்து 9 பேர் உயிரிழப்பு

இடிந்து விழுந்த கட்டடம் 

பேரணாம்பட்டு பகுதியில் வீடு இடிந்து 9 பேர் உயிரிழந்தனர், 8 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு பகுதியிலுள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியில் வசித்து வந்த இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர், பாதுகாப்பு காரணத்திற்காக அருகேயுள்ள அஜீசியா தெருவில் வசித்து வரும் ஹபீப் என்பவரது மாடி வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளனர்.

தொடர் மழையால் பலவீனமாக இருந்த அந்த கட்டடம் இன்று காலை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு துறையினர் ஈடுபட்டனர்.

மீட்கப்பட்டவர்கள் பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, மீட்பு பணிகளை பார்வையிட்டார். இது குறித்து பேர்ணாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் ஐந்து லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story