குடியாத்தத்தில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடையை காலி செய்யுமாறு அந்த இடத்தின் உரிமையாளர் கேட்டுக்கொண்டதன் பேரில் அதிகாரிகள் அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற பல இடங்களில் ஆய்வு செய்தனர்.
குடியாத்தம்- காட்பாடி ரோடு ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையத்திற்கு பின்புறம் ஆசிரியர்காலனி, பாண்டியன் நகர் செல்லும் பிரதான சாலையில் குடியிருப்பு பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆசிரியர்காலனி, பாண்டியன்நகர், சொர்ணலட்சுமி கார்டன் பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து இங்கு டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது. இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்லும் வழியாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பெண்கள், மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்தப்பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு இருப்பதாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், எனவே டாஸ்மாக் கடை வர வாய்ப்பில்லை எனவும் உறுதியளித்தனர். மேலும் குடியாத்தம் தாசில்தார் வத்சலாவும், இந்தப்பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் என உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மனுக்களை தாசில்தார் மற்றும் இன்ஸ்பெக்டரிடம் அளித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu