இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு வேலூரில் 26ம்தேதி நடக்கிறது
இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு வேலூரில் 26 ம்தேதி நடக்கிறது.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு வரும் 26ம் தேதி வேலூரில் நடக்கிறது. இதில் பங்கேற்க 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10,906 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் 13 ம்தேதி நடந்தது.
இதையடுத்து உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 21 ம்தேதி முதல் ஏப்ரல் 28 ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவியதால் இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் மாநிலம் முழுவதும் 40 மையங்களில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உடற்தகுதி தேர்வு நடத்த போதுமான இடவசதி இல்லை, தேர்வு செய்வதற்கான பணியாளர்கள் பற்றாக்குறை, உபகரணங்கள் இல்லை என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் 40 மையங்களில் இருந்து 20 மையங்களாக குறைக்கப்பட்டு தேர்வு நடத்த ஏற்பாடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது :வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் 2 ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுடய அனுமதி சீட்டை இணையளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வரும் 26ம் தேதி காலை தொடங்குகிறது. முதலில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அதன் பிறகு உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் கலந்து கொள்பவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu