வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வு: 45 நாட்களுக்கு பிறகே காரணம் தெரியவரும்
வேலூர் மாவட்டத்தில் உள்ள நில அதிர்வு உணரும் கருவியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்
வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பாக வரும் 45 நாட்களுக்கு பிறகு அதற்கான காரணம் தெரியவரும் என்றார் மாவட்டத் தலைவர் குமாரவேல் பாண்டியன்.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த நவம்பர் மாதம் 29 தேதி மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. இதன் காரணமாக பூமிக்கடியில் மிகுந்த சத்தம் ஏற்பட்டதாகவும் பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக புவியியல் வல்லுநர்கள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் கழணிப்பாக்கம்,பேரணாம்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆந்திர மாநிலம் வீகோட்டா, பலமனேரி ஆகிய இடங்களில் நில அதிர்வு கணக்கிடும் கருவி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் காரணமாக, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே கழணிப்பாக்கம் என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நில அதிர்வு கண்டறியும் கருவியை, மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் மற்றும் சென்னை புவியியல் ஆய்வு மையத்தின் புவியியல் வல்லுநர்கள் சிவகுமார், ஓ.பி.சிங் ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரணாம்பட்டு பகுதிகளிலும் மாவட்ட எல்லையை ஒட்டிய ஆந்திரா மற்றும் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது.இந்நிலையில் நில அதிர்வு குறித்து ஆய்வு செய்ய புவியியல் ஆய்வு வல்லுநர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர் .
தற்போது ஐந்து இடங்களில் நில அதிர்வு கருவி அமைக்கப்பட்டு அதன் மூலம் 45 நாட்களுக்கு ஆய்வு செய்து,அதன் பின்னர் நில அதிர்வு ஏற்பட என்ன காரணம் என்பதை அறிய முடியும் எனவும் அவர் கூறினார்.நிலநடுக்கத்தால் மட்டுமல்லாமல் பல்வேறு காரணங்களால் நில அதிர்வு ஏற்படும் என்பதால் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.எனவே பொதுமக்கள் நில அதிர்வு குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu