சாலையில் கூட்டமாக சுற்றி திரியும் மாடுகள், வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் கூட்டமாக சுற்றி திரியும் மாடுகள், வாகன ஓட்டிகள் அவதி
X

வேலூர் சாலையில் சுற்றி திரியும் மாடுகள் 

கூட்டமாக மாடுகள் சாலைகளில் திரிவதால் வாகனங்களில் செல்வோருக்கு பாதிப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அண்ணாசாலை, கிருபானந்தவாரியார் சாலை,நேதாஜி மார்க்கெட், சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, வேலூர் பழைய பேருந்து நிலையம், கிரீன்சர்க்கிள், காட்பாடி உட்பட பல இடங்களில் சாலைகளில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகிறது.

இந்த மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டாலும் தொடர்ந்து சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சத்துவாச்சாரி மேம்பாலம் அருகே சாலையில் மாடுகள் கூட்டமாக போக்கு வரத்திற்கு இடையூறாக சுற்றி திரிகிறது. இதனால் அவ்வழியாக சென்ற பேருந்துகள், கார், பைக் போன்ற வாகன ஓட்டிகள் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

காலை, மாலை, இரவு என எப்போதும் இந்த பகுதிகளில் மாடுகள் சுற்றுகின்றன. இவ்வாறு கூட்டமாக மாடுகள் சாலைகளில் திரிவதால் வாகனங்களில் செல்வோருக்கு பாதிப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.

சாலையில் நிற்கும் மாடுகள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதாலும், சாலைகளில் ஓடுவதாலும் பைக்கில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்க கூடிய நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த மாடுகள் சாலைகளை மறித்து அமர்ந்து கொள்கின்றன.

இந்த பகுதி வழியாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் திடீரென மாடுகளின் ஓட்டத்தால் பயந்து நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். இதிலும் சில மாடுகள் திடீரென சாலைகளில் நடந்து செல்வோர் மீது முட்ட வருவதால் பொதுமக்கள், முதியவர்கள் அச்சத்துடன் சாலையையும், மாடுகளையும் கடந்து செல்கின்றனர்.

எனவே சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றியும் திரியும் மாடுகளை பிடித்து நிரந்த தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா