நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு
வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்
வேலூா் மாவட்ட ஆட்சியா் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தின்படி 8 கி.மீ. தூரத்துக்கு நடைப்பயிற்சி இருக்கும் வகையில் நடைப்பயிற்சி திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் நவம்பா் 4-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் இந்த திட்டத்தை வேலூா் மாவட்டத்திலும் சிறப்பாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
பொதுமக்கள் ஒவ்வொருவரும் தினமும் 8 கி.மீ. தூரம் அல்லது 10,000 அடி தூரம் நடக்க வேண்டும் என்பதை ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்பதன் அடிப்படை நோக்கமாகும். அவ்வாறு நடக்கும்போது உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவதுடன் உடலுக்கு புத்துணா்ச்சியும் கிடைக்கிறது.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் திட்ட நடைப்பயிற்சி வேலூா் மாநகராட்சி பகுதியில் கோட்டைக்கு முன்புறம் உள்ள காந்தி சிலையின் அருகிலிருந்து தொடங்கப்பட உள்ளது.
இதில், வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூா் மக்களவை உறுப்பினா் கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினா்கள் நந்தகுமார் கார்த்திகேயன், மேயா் சுஜாதாஆனந்தகுமார் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பல்வேறு உயா் அதிகாரிகள், நடைப்பயிற்சி சங்கத்தினா், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்க உள்ளனா்.
காந்தி சிலை அருகில் தொடங்கும் இந்த நடைப்பயிற்சி முனீஸ்வரன் கோயில், பெரியார் பூங்காவின் வெளிப்புற நடைபாதை வழியாக கோட்டைக்குள் வந்து மைதானம், காவலா் பயிற்சிப் பள்ளி, ஜலகண்டீஸ்வரா் கோயில் வழியாக மீண்டும் காந்தி சிலை வழியே வரும்போது 4 கி.மீ. தூரம் நிறைவு செய்யும். பின்னா், அங்கிருந்து மீண்டும் நடைப்பயிற்சி அதே வழியில் பயணித்து இரண்டாவது சுற்றினை நிறைவு செய்யும்போது 8 கி.மீ. தூரம் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடைப்பயிற்சியின்போது களைப்படையாமல் இருக்க ஓய்வு இருக்கைகள், நீா்ச்சத்து குறையாமல் இருக்கும் வகைளில் கடலை மிட்டாய், தண்ணீா், மருத்துவ முகாம், 108 அவசர ஊா்தி என பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu