வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது
திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறன்களை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைக்கும் திருநங்கைகளை கவுரவிக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ந்தேதி திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதும், ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2021-22-ம் நிதியாண்டுக்கான திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதினை பெற விரும்பும் திருநங்கைகள் அரசு உதவி எதுவும் பெறாமல் தாமாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்கவேண்டும். குறைந்தபட்சம் 5 திருநங்கைகளுக்கு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி செய்திருக்க வேண்டும். குறிப்பாக திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது.
இந்த தகுதிகள் உள்ள திருநங்கைகள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் சுய விபரம், ஒரு பக்க அளவில் சாதனை புரிந்த விவரம், ஏற்கனவே விருதுகள் எதாவது பெற்றிருந்தால் அதன் விவரம், புகைப்படத்துடன் கூடிய செயல் முறை விளக்கம், சேவைகளை பாராட்டி பத்திரிகை செய்தி தொகுப்பு, சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை ஆகியவை இருக்க வேண்டும்.
மேலும் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வரும் 28-ந் தேதி மாலைக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu