துணை ஆய்வாளர், 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்

துணை ஆய்வாளர், 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்
X

நச்சுமேடு மலைகிராமத்தில் சூறையாடப்பட்ட வீடு


  

நச்சுமேடு மலைகிராமத்தில் சாராய வேட்டையின்போது வீட்டில் உள்ள பொருட்களை எடுத்த எஸ்.ஐ., 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்

பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கள்ளச்சாராய விற்பனை வேலூர் சிட்டிக்குள்ளும், அதனை ஒட்டிய கிராமங்களிலும் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க காவல் துறையினர் தொடர் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊசூர் அடுத்த குருமலையில் உள்ள நச்சுமேடு மலைகிராமத்தில் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் பேரில் அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான 4 காவலர்கள் நச்சுமேடு பகுதியில் சாராய வேட்டை நடத்தியுள்ளனர்.

சாராயம் காய்ச்சுவதாக அறியப்பட்ட இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோரின் வீடுகளுக்கு காவல் துறையினர் சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. இருவர் வீட்டிலும் இருந்த சுமார் 1000 லிட்டர் சாராய ஊறல், 8 மூட்டை வெல்லம், 50 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்ச தேவையான மூலப்பொருட்களையும் போலிசார் அழித்தனர். பின்னர் இளங்கோ மற்றும் செல்வம் ஆகிய இருவரும் தலைமறைவானதால் அங்கிருந்து போலீசார் புறப்பட்டுள்ளனர்.

இதனிடையே சாராய வேட்டைக்கு வந்த காவலர்கள், செல்வம் மற்றும் இளங்கோ ஆகியோர் வீட்டில் நுழைந்து பீரோவை உடைத்து சுமார் 8.5 லட்சம் ரொக்க பணம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு மலையை விட்டு கீழே இறங்கிக் கொண்டிருப்பதாக கூறி காவலர்களை அந்த கிராம மக்கள் வழிமறித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த பாகாயம் காவல் ஆய்வாளர் சுபா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல் துறையினர் எடுத்ததாக கூறப்பட்ட பணம் மற்றும் நகையை, இளங்கோ மற்றும் செல்வம் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சாராய வேட்டைக்கு சென்ற போலீசார் கூறுகையில், நாங்கள் சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் இளங்கோ மற்றும் செல்வம் ஆகிய இருவர் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்று சாராய ஊறல், சாராயம், வெல்லம், மற்றும் மூலப்பொருட்களை அழித்தோம். மலையைவிட்டு திரும்பிக்கொண்டிருக்கும் போது மேற்குறிப்பிட்ட இருவரது வீட்டிலும் பணம், நகை காணாமல் போனதாக எங்களுக்கு தகவல் வந்தது அதனை அடுத்தே அங்கு சென்று அவர்கள் வீட்டில் இருந்த பணத்தையும் நகையையும் எடுத்து ஒப்படைத்தோம் என கூறினர்.

ஆனால், நச்சுமேடு கிராம மக்களோ, இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோரின் வீட்டை உள்ளே சென்ற போலிசார் வீட்டை நாசம் செய்துவிட்டு பீரோவை உடைத்து பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு மலையை விட்டு கீழே இறங்கினார்கள் அவர்களை மடக்கி பிடித்தோம் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் சாராயவேட்டைக்கு சென்ற இடத்தில் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை காவல் துறையினர் எடுத்து சென்றதாக பொது மக்கள் கூறிய புகாரையடுத்து வேலூர் ஏ.எஸ்.பி.ஆல்பர்ட் ஜான் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்கு பிறகு அரியூர் உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா உள்ளிட்ட 3 பேர் மீது, பகலில் வீட்டை உடைத்து திருடுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அரியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொரோனா பொது முடக்கத்தால் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் கள்ளச்சாராயத்தை தேடி அலைகின்றனர். இதை சரியாக பயன்படுத்தும் கள்ளச்சாராய கும்பல் அணைகட்டு மலை பகுதி, பேர்ணாம்பட் மற்றும் குடியாத்தம் மலை பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்றுவருவதும், அதனை தடுக்க செல்லும் காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக இருந்து வருவது வேதனையான ஒன்று.

சாராயம் காய்ச்சு விற்பனை செய்பவர்களை அந்தந்த கிராம மக்களே அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும். சொந்தம் பந்தம் என்று பார்த்து விட்டுவிடக்கூடாது. அவர்கள் செய்யும் தவறால் அந்த கிராமத்திற்கே தலைகுனிவுதான். அதே சமயம், சாராய வேட்டைக்கு செல்லும் போலிசாரும், வீட்டின் பூட்டை உடைத்து வீட்டை சூறையாடுவது, பொருட்களை எடுப்பது, பீரோவை உடைப்பது, பணம் மற்றும் நகைகளை எடுத்துச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அது போலிஸ் மீதுள்ள நம்பிக்கையை கெடுத்துவிடும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil