விவசாய நிலத்தில் முகாமிட்ட 3 காட்டு யானைகள்

காட்பாடி அருகே விவசாய நிலத்தில் முகாமிட்டுள்ள 3 ஆண் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. ஓசூரில் இருந்து வந்த வேட்டை தடுப்பு காவலர்களின் உதவியுடன் வனத்துறையினர் களம் இறங்கினர், இரவு முழுவதும் முயற்சி செய்து யானைகளை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டினர்.

தமிழகத்தை ஒட்டிய ஆந்திர பகுதியான சித்தூர் மாவட்ட வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த 3 ஆண் காட்டுயானைகள் நேற்று இரவு வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை அருகே தெங்கால் எனும் பகுதியில் நுழைந்து பாபு என்பவரின் கரும்பு தோட்டத்தில் நேற்று இரவு முதல் முகாமிட்டிருந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த காட்பாடி மற்றும் ஆற்காடு சரக வனத்துறையினர் 3 ஆண் காட்டு யானைகளையும் கண்காணித்து வந்தனர். இதனை அடுத்து மாலை 5.00 மணி அளவில் வேலூர் மாவட்ட வன அலுவர் பார்கவதேஜா மற்றும் உதவி வன பாதுகாவலர் வேலூர் வனக்கோட்டம் முரளி ஆகியோர் தலைமையிலான ஆற்காடு, வேலூர், பேர்ணாம்பட், குடியாத்தம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வனச்சரகத்தை சேர்ந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறை, வருவாய் துறையை சேர்ந்த சுமார் 60 பேர் பட்டாசு வெடித்தும், வெடி போட்டும், தீ பந்தம் கொண்டும், மேளம் அடித்து 3 காட்டு யானைகளை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அப்போது யானையை விரட்ட வெடிக்கப்பட்ட பட்டாசு கரும்பு தோட்டத்தில் விழுந்ததால் கருப்பு தோட்டம் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதனையடுத்து அப்பகுதி பொது மக்கள் தீயை போராடி அணைத்தனர்.

அதனை அடுத்து தொடர்ந்து யானைகளை விரட்டியதில் 3 காட்டு யானைகளும் ஆந்திரா வனப்பகுதி பக்கம் செல்லாமல் பொன்னை ஆற்றை ஒட்டிய கோடான்பள்ளி எனும் இடத்தில் முகாமிட்டுள்ளதால் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். விளை நிலத்தில் முகாமிட்டுள்ள 3 யானைகளை விரட்ட ஓசூரில் இருந்து சிறப்பு வேட்டை தடுப்பு காவலர்கள் 5 பேர் கொண்ட ஒரு குழுவினர் வேலூர் வந்துள்ளனர். அவர்களின் உதவியோடு தமிழ்நாடு மற்றும் ஆந்திரா வனத்துறையினர், யானையை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 காட்டு யானைகள் விவசாய விளை நிலத்தில் முகாமிட்டுள்ளதால் அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் யானைகள் தற்போது உள்ள பொன்னை அடுத்த தெங்கல் பகுதிக்கும் ஆந்திர வனப்பகுதிக்கும் 2 கிலோ மீட்டர் தூரம் இருப்பதாகவும். இதுநாள் வரை இந்த பகுதியில் யானைகள் வந்தே கிடையாது முதல் முறையாக தற்போது தான் வந்துள்ளது. ஆகவே அவற்றை 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஆந்திர வனப்பகுதிக்கு விரட்டுவது சிரமமாக உள்ளதாகவும். பொதுவாக யானைகளின் வழித்தடத்தில் ஏதேனும் தடை ஏற்பட்டிருந்தால் இப்படி வழிமாறி வர வாய்ப்புள்ளது. ஆகவே ஆந்திர வனப்பகுதியில் யானைகளின் வழித்தடத்தில் ஏதேனும் தடை ஏற்பட்டுள்ளதாக எனவும், வேறேதும் காரணங்களுக்காக யானைகள் இப்பகுதிக்கு வந்துள்ளதா என்பது குறித்தும் தமிழக மற்றும் ஆந்திர வனத்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
AI-ன் வருங்கால வளர்ச்சி - தொழில்நுட்பத்தின் புதிய நிலையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!