'வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம்' மு.க. ஸ்டாலின் தகவல்

வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் மு.க. ஸ்டாலின் தகவல்
X
MK Stalin Latest News in Tamil -'வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம்' அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

MK Stalin Latest News in Tamil -சென்னை ராஜா அண்ணாமலை புரம் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் வள்ளலாரின் 200-வது பிறந்தநாள் விழாவான தனிப்பெரும் கருணை நாள், வள்ளலார் தொடங்கிய தர்மசாலாவின் 156 வது ஆண்டு விழா, அவர் ஏற்றிய தீபத்துக்கு 152 வது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த நிகழ்ச்சி நடப்பதை பார்த்து சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏன் அதிர்ச்சியாக கூட இருக்கலாம். என்னை பொறுத்தவரையில் சிலர் சொல்லிவரும் அவதூறுக்கு பதில் சொல்ல வேண்டிய விழா தான் இந்த விழா. திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல. மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது அல்ல. மதத்தை வைத்து பிழைக்க கூடிய சிலர் நாட்டிலே இது பற்றி விமர்சனம் செய்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது என பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

ஆன்மீகத்தை அரசியலுக்கும் தங்களது சொந்த சுயநலத்திற்கும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானது தான் தி.மு.க. ஆட்சி. தமிழ் மண்ணில் சமயப் பண்பாட்டை அறிந்தவர்கள் இதை நன்கு உணர்வார்கள்.பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்று பிற்போக்கு கயமைத்தனங்களை எதிர்க்கக்கூடிய வள்ளுவரின் மண்தான் இந்த தமிழ் மண்.

'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையிலே' என்று முழங்கிய சித்தர்கள் உளவியது நமது தமிழ் மண். இறைவன் ஒருவன் தான் அவன் ஜோதி வடிவிலானவன் என்று எடுத்து சொல்லிய வள்ளலாரின் மண் இந்த தமிழ் மண். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் கருத்தை தான் தி.மு.க.வினருக்கு எடுத்துரைத்தார் அண்ணா. அந்த அடிப்படையில் தான் வள்ளலாரின் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்திருக்கிறோம். வள்ளலாரை போற்றுவது திராவிட ஆட்சியின் கடமை.

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம்.ரூ. 100 கோடி மதிப்பீட்டில் இதனை அமைப்பதற்கான வரைவு திட்டம் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும். வள்ளலாரின் முப்பெரும் விழாவையொட்டி ஓராண்டு தொடர் அன்னதானம், பேச்சாளர்களுக்கு சன்மானம் உள்ளிட்டவற்றிற்காக 3 கோடியே 25 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அன்னதானம் மட்டுமே வள்ளலாரின் அறநெறி அல்ல. சாதி மத வேறுபாடுகள் அற்ற சமநிலை சமூகம் அமைக்க பாடுபடுவது தான் வள்ளலார் உடைய வழியில் நடப்பது. ஒத்தாரும், உயர்ந்தாரும், தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்த வேண்டும் என்பதே வள்ளலாரின் அறநெறி.அத்தகைய அறநெறி உலகத்தை படைக்க உறுதி ஏற்போம்.

இவ்வாறு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story