பலத்த பாதுகாப்புடன் உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு, பலத்த பாதுகாப்புடன் சற்று முன்னர் தொடங்கியது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கினாலும், காலை 6:30 மணி முதலே பல இடங்களில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க காத்திருந்தனர். முன்னதாக, வாக்குச்சாவடியில், பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில், மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இன்று காலை 7, மணிக்கு துவங்கியுள்ள வாக்குப்பதிவு, மாலை 6, மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சுமார் 2½ கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவுக்கு 1 லட்சத்து 6 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மின்னணு எந்திரங்கள் அனைத்தும் நேற்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
தமிழகத்தில், மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல், ஜனவரி மாதம் 28-இல் தொடங்கி, பிப்ரவரி 4-ஆம் தேதி வரை நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 73 போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் 22,ஆம் தேதி எண்ணப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu