பஸ்சில் இருந்து இறக்கிவிடப்பட்ட குடும்பம்: குமரியில் இன்னொரு கொடுமை
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திற்கு, தினமும் வள்ளியூர் பகுதியில் இருந்து நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பலரும், குழுக்களாக வருவர். இவர்கள் நாகர்கோவில் பேருந்து நிலையத்திலும், அதை சுற்றிய பகுதிகளிலும், ஊசி பாசி விற்பனை செய்துவிட்டு, மாலையில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் வள்ளியூர் செல்வது வழக்கம்.
நேற்று, திருநெல்வேலி பேருந்தில் பயணிக்க, மூன்று குழுக்களாக நரிக்குறவர் குடும்பத்தினர் ஏறியுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் சண்டையிட்டபடி, சத்தமிட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் முகம் சுழித்த நிலையில், அவர்களை இறக்கி விடும்படி சக பயணிகள், நடத்துனரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிலையில், நரிக்குறவர் குடும்பத்தினரைநடத்துனர் கீழே இறக்கி விட்டுள்ளார். இதில் ஏற்கனவே அவர்களுக்குள் சண்டையிட்டு கொண்டு இருந்ததால், அழுது கொண்டு இருந்த குழந்தை, ஒரு முதியவர் மற்றும் பெண்மணி ஒருவர் என மூன்று பேரும், அவர்களது உடமைகளுடன் பேருந்தில் இருந்து இறக்கி விடும் காட்சிகளை வெளியே நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் வீடியோ பதிவு செய்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன், குமரியில் மீனவ மூதாட்டி செலவமேரி, பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம், தமிழக முதல்வரின் கவனம் வரை சென்று, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் குமரியில் நடந்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu