சிட்கோ மூலம் தமிழகம் முழுவதும் ஒரே சீரான தொழில் வளர்ச்சி - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள குறு சிறு நிறுவனங்களுக்கு விரைந்து பட்டா வழங்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் மட்ட செயலாக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் ஆய்வுக் கூட்டத்தின் போது தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் இன்று (03.12.2021) சென்னை , கிண்டியில் சிட்கோ அலுவலக நிறுவன கூட்ட அரங்கில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் தமிழ்நாடு சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள 100 தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை பத்திர அனுமதி ஆணைகளையும், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் வாயிலாக புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தின் கீழ் 9 கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ. 16.22 லட்சம் மானியமாகவும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் நடைபெற்ற திறந்த கண்டுபிடிப்பு சவால் நிகழ்ச்சியில் சிறந்த தீர்வுகளை கூறிய 2 நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.5.75 லட்சத்திற்கான காசோலையும், இரண்டாம் பரிசாக ரூ.3.75 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.
ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இத்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சிட்கோ மூலம் மாநிலத்தில் ஏற்கனவே 122 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரே சீரான தொழில் வளர்ச்சியை கொண்டுவர ஏதுவாக, இவ்வரசு பொறுப்பேற்றவுடன் திருவள்ளுர், செங்கல்பட்டு, திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 413 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.241 கோடி மதிப்பில் மேலும் 5 புதிய தொழிற்பேட்டைகளும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.35.63 கோடி மதிப்பில் 50 விழுக்காடு அரசு மானியத்துடன் 1 புதிய தனியார் தொழிற்பேட்டை உருவாக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றும் வகையில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் நில உரிமை துறைகளுடன் கலந்து பேசி திட்டத்தினை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
பல்வேறு நில வகைப்பாட்டினால் பட்டா வழங்க இயலாமல் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள நில பிரச்சனைகளை விரைந்து தீர்க்கும் வகையில் தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்ட செயலாக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அரசாணை கடந்த 30.11.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் சிற்ப கலைஞர் தொழிற்பூங்கா ரூ.23 கோடி மதிப்பில் 19 ஏக்கர் மதிப்பில் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இப்பணியினையும், கோயம்புத்தூர் மாவட்டம் சொலவம்பாளையத்தில் புதிய தனியார் தொழிற்பேட்டையும், செங்கல்பட்டு மாவட்டம் கொடூர், மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய பகுதிகளில் துவங்கப்படவுள்ள புதிய தொழிற்பேட்டைகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் முன்மொழிவு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை உடன் தயாரித்து அரசுக்கு உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பொது உற்பத்தி கட்டமைப்பு திட்டத்தின் கீழ் (Common Facility Centre) கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளாளலூர், மதுக்கரை மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆகிய 3 இடங்களில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும், அட்டைப்பெட்டி அச்சடித்தல், உணவுப்பொருள் பதப்படுத்துதல், கயிறு தயாரித்தல் மற்றும் போட்டோகிராஃப் ஆகிய தொழில்களுக்கு 5 பொது வசதி மையங்கள் ரூ. 55 கோடியில் அமைக்க, ஒன்றிய அரசின் பங்கினைப் பெற புதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்கள் தங்குவதற்கு குறைவான வாடகை குடியிருப்புகள் கட்டுவதற்காக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 800 தொழிலாளர்கள் தங்குவதற்காக 1.21 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.29.47 கோடி மதிப்பீட்டில் 5 மாடிகளுடன் கட்டடம் கட்டவும் மற்றும் கோயம்புத்தூர் தொழிற்பேட்டையில் 1000 தொழிலாளர்கள் தங்குவதற்காக 482 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.33.84 கோடி மதிப்பீட்டில் 7 மாடிகளுடன் கட்டடம் கட்டும் பணியினை விரைந்து தொடங்க வேண்டும்.'' என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி. அருண்ராய், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். கஜலட்சுமி, சிட்கோ பொது மேலாளர் செல்வி ரா. பேபி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu