'உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வர் ஆவார்'- சீமான் கணிப்பு
சீமான் -உதயநிதி ஸ்டாலின்.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நாளை தமிழக அமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் சுமார் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வின் தலைவராகவும், 4முறை தமிழக முதல் அமைச்சராகவும், தனது இறுதி காலம் வரை தமிழக அரசியலில் மட்டும் இன்றி இந்திய அரசியலையே தனது சாதுர்யத்தால் மாற்றி காட்டும் திறன் படைத்திருந்தவரகாவும் விளங்கிய மு. கருணாநிதியின் பேரன்.
தற்போதைய தி.மு.க. தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலினின் அருந்தவ புதல்வன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரும் கூட. இது தவிர வேறு என்ன தகுதி வேண்டும் அவர் அமைச்சராவதற்கு?
தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. என்று ஆட்சி அமைத்ததோ அப்போதே உறுதி செய்யப்பட்ட ஒன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது. இளவரசருக்கு பட்டாபிஷேகம் எப்போது என்ற கேள்வி தான் தொக்கி கொண்டு இருந்தது. அந்த கேள்விக்கு இப்போது பதில் கிடைத்து உள்ளது அவ்வளவுதான்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் மாணவர்களுக்கான சிறப்பு அமர்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணபை்பாளர் சீமான், மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது மத்திய அரசு இந்தி திணிப்பு குறித்து கண்டனம் தெரிவித்து பேசிய அவர், மற்ற மொழிகளை கற்பதைதான் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் மொழிகளை திணிப்பதை மட்டுமேதான் தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு எதற்கு என்று கேள்வி எழுப்பியவர், இட ஒதுக்கீடு வேண்டும் எனில் அவர்கள் பின் தங்கிய வகுப்புக்கு தங்களை மாற்றிக் கொள்ளட்டும் என்றும் கூறினார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த சீமான் இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் அவர் தமிழகத்தின் துணை முதலமைச்சராவதற்கு கூட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்ததோடு மேலும் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu