முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கிவைத்த உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கிவைத்த உதயநிதி ஸ்டாலின்
X

சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கிவைத்து பார்வையிட்டார்.

சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கிவைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (சென்னை மாவட்ட பிரிவு) மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான 2022-23ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (24.01.2023) தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022- 23யை நடத்தவும், மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடி உட்பட ரூ.47.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்களிடம் இருந்து முன்பதிவுகள் வரப்பெற்றுள்ளன. விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் இந்த முன்பதிவானது 29.01.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் முதல் முறையாக பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளுக்கு பல்வேறு போட்டிகள் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்போட்டிகளில் அதிக அளவில் பதக்கம் பெறக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் "சிறந்த பயிற்சியாளர்" மற்றும் "சிறந்த உடற்கல்வி ஆசிரியர்/இயக்குநர்" ஆகிய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.

அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கும் விதமாக இன்று (24.01.2023) இராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தில் கால்பந்து, கபடி மற்றும் இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகளையும், கோடம்பாக்கம் மண்டலம், தியாகராயநகர், நடேசன் பூங்கா எதிரில் உள்ள கண்ணதாசன் மைதானத்தில் கூடைப்பந்து, சிலம்பம் மற்றும் சதுரங்க விளையாட்டிப் போட்டிகளையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil