கஞ்சா வழக்கில் கைதானவர்களின் விடுதலைக்கு உதவிய எலிகள்

சென்னை ஒருங்கிணைந்த உயர் நீதிமன்ற கட்டிடம். (கோப்பு படம்).
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக மற்றும் விற்பனை செய்யப்படுவதாக கைது செய்யப்படுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவது உண்டு. அவ்வாறு கைது செய்யப்படுபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது நீதிமன்ற நடைமுறை.
இந்த நிலையில், சென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக கைதான இருவரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. அதற்கு மறைமுக காரணமாக எலிகள் இருந்ததுதான் விசித்திரமாக அமைந்துள்ளது. இதுகுறித்த மேலும் தகவல்களை காண்போம்:
சென்னை மாட்டான்குப்பம் பகுதியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ராஜகோபால் மற்றும் நாகேஸ்வரராவ் ஆகிய இருவரை, மெரினா காவல்துறையினர், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய மெரினா காவல்துறையினர் , குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பறிமுதல் செய்த கஞ்சாவில் 100 கிராம் கஞ்சாவை, எடுத்து 50 கிராம் நீதிமன்றத்திற்கும், 50 கிராம் சோதனை செய்வதற்காக ஆய்வுக்கூடத்திற்கும் அனுப்பப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் வைத்திருந்த மீதமுள்ள 21.9 கிலோ கஞ்சாவில், 11 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். குற்றப்பத்திரிக்கையில் உள்ளபடி 21.9 கிலோ கஞ்சாவை தாக்கல் செய்வதற்கு பதிலாக குறைவான அளவில் கஞ்சாவை மட்டுமே சமர்ப்பித்ததால், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
ஏற்கெனவே, இதேபோன்று கோயம்பேடு காவல் நிலையத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதில் 11 கிலோ கஞ்சாவை மட்டுமே அந்த வழக்கில் காவல்துறையினர் சமர்ப்பித்தனர். மீதமுள்ள கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu