தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது.
இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். பின்னர், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை அரசு ஏற்று கொண்டு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், டிஐஜியாக இருந்த கபில் குமார் சரத்கர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த மகேந்திரன், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறையை சேர்ந்த 17 பேர், வருவாய் துறையை சேர்ந்த 3 பேர் என 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்தார். அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கின் நிலை என்ன? ஒரு காவல்துறை அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது மற்ற காவல் துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா என கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக விளக்கமளிக்க, சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞரும், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞரும் அடுத்த விசாரணையின்போது ஆஜராக சொல்வதாக தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார். குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் இன்னும் பணியில் நீடிக்கிறார்களா அல்லது ஓய்வு பெற்று விட்டார்களா என்பதும் தெரியவில்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், அரசு தரப்பு தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்று இருந்த காவல்துறை அதிகாரி சைலேஷ்குமார் யாதவ் ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் பிரச்னை ஏற்பட்டபோது திறமையாக கையாண்டு நீதிமன்றம் சுமுகமாக செயல்பட செய்தவர் என்று தெரிவித்து, அவர் எப்படி இந்த குற்றச்சாட்டுக்குள் ஆளானார் என்று கேள்வி எழுப்பினார்.
தற்போது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன? துப்பாக்கி சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu