/* */

மண், நீரில் உலோகங்களை கண்டறிய கையடக்க கருவி: உருவாக்கிவரும் ஐஐடி

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், மண் மற்றும் நீரில் கலந்துள்ள கன உலோகங்களைக் கண்டறிவதற்காக சிறிய அளவிலான பயன்பாட்டிற்குத் தயார்நிலையில் உள்ள சாதனத்தை உருவாக்கி வருகின்றனர்.

HIGHLIGHTS

மண், நீரில் உலோகங்களை கண்டறிய கையடக்க கருவி: உருவாக்கிவரும் ஐஐடி
X

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள், மண்ணிலும் நீரிலும் கலந்துள்ள கன உலோகங்களைக் கண்டறிய கையடக்கக் கருவியை உருவாக்கி வருகின்றனர். உரிய பயிற்சி பெறாதவர்களும் மண், நீர் ஆகியவற்றின் தரத்தை விரைந்து கண்டறிய இது உதவிகரமாக இருக்கும்.

மண் தரக்குறியீட்டின் தொழில்நுட்பம் அல்லாத மதிப்பீடுகளை தொழில்நுட்ப ரீதியாக பொறியியல் சார்ந்த சாதனத்தில் தொகுத்து மொபைல்போன் போன்ற செயலியில் வழங்குவதுதான் இந்த ஆராய்ச்சியின் நோக்கமாகும். மண்ணில் கன உலோகம் ஏதேனும் கலந்துள்ளதா என்பதைக் கண்டறிய சாதாரண நபர் களத்தில் பயன்படுத்தக் கூடிய கருவிகள் ஏதும் தற்போது இல்லை.

அண்மையில் இதுதொடர்பாக ஆராய்ச்சிக் குழுவினர் ஒரு திருப்புமுனையை எட்டியதை அடுத்து, தற்காலிக காப்புரிமையைப் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள 36,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற குடியிருப்புகளில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் ப்ளோரைடு, ஆர்சனிக், கனஉலோகங்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுவதாக மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத் தரவுகளில் மதிப்பிடப்பட்டுள்ளது. மண்ணில் கனஉலோகங்கள் சேர்ந்திருப்பதால் உப்புத்தன்மை கலந்து மண்ணின் தரத்தையும் பாதிக்கிறது. அதுமட்டுமின்றி வேளாண் விளைச்சல் குறைந்து உலகளாவிய உணவுப் பாதுகாப்பிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு எதிர்விளைவையும், மனித உடல்நலத்தில் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன.

‘Inductively Coupled Plasma-Optical Emission Spectroscopy’ (ICP-OES) போன்ற தற்போதைய உயர்தரமான தொழில்நுட்பங்களுக்கு நம்பகமான, அதிநவீன ஆய்வகங்களும், நீண்ட நடைமுறையும் தேவைப்படுகிறது. சாதாரண நபர்களோ, விவசாயிகளோ கையடக்க கருவிகளைப் பயன்படுத்தும்போது, மகத்தான நன்மைகள் கிடைப்பதுடன், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

ஐஐடி மெட்ராஸ்-ன் உலோகவியல் மற்றும் பொருட்கள் (Mettallurgical and Materials) துறையின் இணைப் பேராசிரியர்களான டாக்டர் ஸ்ரீராம் கே.கல்பாத்தி, டாக்டர் டிஜு தாமஸ், ஐஐடி மெட்ராஸ் ப்ராஜக்ட் சயின்டிஸ்ட் செல்வி கே.வி.வித்யா ஆகியோர் இந்த ஆராய்ச்சிக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். கனஉலோகத்தைக் கண்டறியக் கூடிய சிறிய மற்றும் ஆயத்த தயாரிப்பு சாதனத்தை உருவாக்கும் திட்டத்தைக் இக்குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

இத்தொழில்நுட்பத்தின் முக்கிய தாக்கம் குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ்-ன் உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீராம் கே.கல்பாத்தி கூறுகையில், "இந்திய மக்கள் விவசாயத்தில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதால், கன உலோகங்களின் செறிவுகளைக் கண்டறிந்து அளவிட தொழில்நுட்ப ரீதியான தீர்வு உடனடியாகத் தேவைப்படுகிறது. எந்தெந்தப் பயிர்களை பயிரிட வேண்டும், எப்போது கவனிப்பை செலுத்த வேண்டும் போன்றவற்றைத் தீர்மானிக்க விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களை இத்தொழில்நுட்பம் வழங்கும்" எனத் தெரிவித்தார்.

திட்டத்தின் தற்போதைய நிலை, களப்பணி குறித்த காலக்கெடு ஆகியவை குறித்து விவரித்த டாக்டர் ஸ்ரீராம் கே.கல்பாத்தி கூறும்போது, "செம்பு, ஈயம், காட்மியம் (பிபிஎம் அளவு), ஆகியவற்றுக்கான உயர்தெளிவுத் திறனைக் கண்டறியும் ஆராய்ச்சியில் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பிட்ட சில உலோகங்களைக் கண்டறிந்திருக்கிறோம். எங்கள் கருத்துகளை மண்/நீர் மாதிரிகளைக் கொண்டு சரிபார்க்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். ஐஐடி மெட்ராஸ்-ன் ரூரல் டெக்னாலஜி ஆக்சன் குரூப் (RUTAG-IITM) ஆதரவுடன், ராமேஸ்வரத்தில் உள்ள பல கோவில் குளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகளில் நீரின் தரத்தையும், கனஉலோகங்கள் கலந்திருப்பதையும் ஆய்வு செய்திருக்கிறோம். அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் இத்தொழில்நுட்பத்தை சரிபார்க்கவும், களச்சூழலில் நிரூபிக்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

உணவுக் கலப்பட தடுப்பு திருத்தச் சட்டம்-1999ன்படி, இந்தியாவில் கனஉலோகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வரம்பாக காட்மியம் 3-6, துத்தநாகம் 300-600, தாமிரம் 135-270, ஈயம் 250-500, நிக்கல் 75-150 (மி.கி./கிலோ) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸ்-ன் உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் டிஜு தாமஸ் கூறும்போது, "மண்ணைக் கழுவிய நீர் அல்லது ஆய்வுக்கான மாதிரி நீரைப் பயன்படுத்தி மெல்லிய பாலிமர் படலங்களில் உலோக அயனிகளை உறிஞ்ச வைக்கும் கருத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் எங்களது தொழில்நுட்பம். எந்த அளவுக்கு கன உலோகங்கள் கலந்திருக்கின்றன? அவற்றின் செறிவு எவ்வளவு? ஆகியவை மதிப்பிடப்பட்டு தரவுகள் அனைத்தும் இந்த பிலிம்களின் அகச்சிவப்பு நிறமாலை சிக்னல்கள் மூலம் ஒப்பிடப்படும். தற்போதுள்ள சூழலில், தண்ணீரில் 10 முதல் 1,000 மைக்ரோமோலார் செறிவுடன் தாமிரமும், 10 முதல் 5,000 மைக்ரோமோலார் செறிவுடன் துத்தநாகம் இருப்பதையும், மில்லியனில் பாதரசம் மிகச் சிறிய அளவுக்கு இருப்பதையும் கண்டறிய முடியும்" என்றார்.

ஐஐடி மெட்ராஸ்-ன் ப்ராஜக்ட் சயின்டிஸ்ட் செல்வி கே.வி.வித்யா கூறுகையில், "பாலிமர் மெல்லிய பிலிம்களில் உலோக அயனிகள் உறிஞ்சப்படுவதை கண்டறியவும், அளவிடவும் தனித்தன்மை வாய்ந்த அகச்சிவப்பு பரிமாற்ற சமிக்ஞைகள் பயன்படுத்தப்படுவதுதான் தற்போதைய கண்டுபிடிப்பின் அறிவியல் புதுமையாகும். தற்போதுள்ள தொழில்நுட்பத்தை விட எங்களது தொழில்நுட்பம் குறைந்தபட்ச மாதிரித் தயாரிப்பு முயற்சிகளை உள்ளடக்கியதாகும். ICP-OES (Inductively Coupled Plasma – Optical Emission Spectroscopy) போன்ற மற்ற நுட்பங்களுடன் ஒப்பிடும்போது, அவற்றில் மாதிரி அமிலமயமாக்கல், குறிப்பிட்ட கரைப்பான்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு போன்ற கட்டுப்படுத்தும் அம்சங்கள் உள்ளன" எனக் குறிப்பிட்டார்.

ஆய்வகத்தில் பரிசோதிக்கப்படும் கருத்து ஆதாரத்துடன், உள்ளூரிலும், வெளியிடங்களிலும் சேகரிக்கப்பட்ட பல்வேறு மண் மற்றும் நீர் மாதிரிகளைக் கொண்டு இந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் கன உலோகங்களைக் கண்டறியும் சோதனை மற்றும் சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 19 Sep 2023 9:43 AM GMT

Related News