டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து

டிடிஎப் வாசன்
உயர்ரக பைக்குகளில் நீண்ட தூரப் பயணம், சாகசங்கள் உள்ளிட்ட வீடியோக்களை யூடியூபில் பதிவு செய்து வருவது டிடிஎப் வாசனின் வாடிக்கையாக உள்ளது.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் கடந்த 17ம் தேதி உயர்ரக பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கினார். இதில் கை முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.
இதனையடுத்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாசன் திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டில் தலைமறைவாக இருந்து வந்தார். இதனை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை விடியற்காலை டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வாசன் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறைக்கு சென்ற வாசன் உடல்நிலை சரியில்லாததால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 19ம் தேதி காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அக்டோபர் மூன்றாம் தேதி வரை அவரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம், டிடிஎஃப் வாசன் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி இனியா கருணாகரன் மீண்டும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த டிடிஎஃப் வாசனை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறைய செய்த டிடிஎப் வாசன் ஜாமீன் மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜாமீன் கோரி பலமுறை தாக்கல் செய்யப்பட்ட வாசனின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதன்படி 2023ம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 2033ம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வரை அவரது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தினகரன் பிறப்பித்த உத்தரவு நகல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் வாசன் மீது உள்ள பல்வேறு வழக்குகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் 8 வழக்குகளும், கோயம்புத்தூர், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வழக்கும் இமாச்சல பிரதேசத்தில் ஒரு வழக்கும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu