நாட்டுப்பருப்பில் சாம்பார் வைத்து பாருங்க... உடல் ஆரோக்கியம் தெரியும்
'பருப்பு இல்லாமல் சாம்பாரா?' இது நாம் பேச்சு வழக்கில் கேட்கும் ஒரு கேள்வி. தமிழ் மக்களின் உணவுக் கலாச்சாரத்தில் சாம்பார் முக்கிய இடத்தை பிடிக்கிறது. சைவப் பிரியர்களின் உணவில் சாம்பார் தான் கிட்டத்தட்ட 99 சதவீத இடத்தைப் பிடிக்கிறது.
அந்த சாம்பாருக்கு தேவையான பருப்பு எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. நம்மில் பலரும் இப்போது சாம்பார் வைத்து சாப்பிட பயன்படும் துவரம்பருப்பு ஆக்ரா பருப்பு என அழைக்கப்படுகிறது. செடியிலிருந்து எடுக்கப்பட்டதும் இந்த பருப்பு எந்திரங்களில் உடைக்கப்பட்டு பின்னர் பாடம் செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. பெரும்பாலும் தமிழகத்திற்கு வரும் இந்த பருப்பு வகைகள் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
துவரம் பருப்பில் கிட்டத்தட்ட 15 வகை உள்ளன என்பது நம்மில் பலருக்கு தெரியாது. என்னதான் நாம் இப்போது விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்தாலும் கலப்பட உணவுகளின் தீமைகள் ரசாயனம் பூசப்பட்ட உணவுப் பொருட்களின் விளைவுகளால் மக்கள் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாவதால் இப்போது மக்கள் இயற்கையை நோக்கி திரும்பி இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
அன்றாடம் நாம் கடைகளில் சாப்பிடும் டீக்கு கூட இப்போது நாட்டு சர்க்கரையை தேடும் காலம் வந்துவிட்டது. கடைகளில் மக்கள் நாட்டு சர்க்கரை டீ போட்டு கொடுங்க என கேட்டு அதனையே விரும்பி சாப்பிடுகிறார்கள்.
அதற்கு காரணம் வெள்ளை சர்க்கரை எனப்படும் சீனி தான் நீரிழிவு உள்ளிட்ட பல வியாதிகளுக்கு அடிப்படை காரணம் என்பதால் விழிப்புணர்வு பெற்ற மக்கள் தற்போது தங்களது அன்றாட உணவில் கூட இயற்கை தந்த அரிய கொடையான பனை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரையை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
இதேபோல இயற்கையாக தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை மக்கள் தேடி விரும்பி அது எங்கு கிடைக்கும் என அலைந்து வாங்கி செல்கிறார்கள். மண்பானை சமையலுக்கும் தற்போது மவுசு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக இயற்கை பொருட்களை விற்பனை செய்யும் நாட்டு சர்க்கரை, மரச்செக்கு நல்லெண்ணெய் என இவற்றை விற்பனை செய்யும் இயற்கை அங்காடிகள் நாட்டில் பெருகி வருகின்றன.
அந்தவகையில் நாட்டுச்சர்க்கரை, மரச்செக்கு எண்ணெய் போல நாட்டுப் பருப்பு என ஒன்று வந்து உள்ளது. அது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்களா என தெரியாது. நாட்டுப்பருப்பு தயாரிப்பது எப்படி? என்பதை இந்த கட்டுரையில் காண்போம். நாட்டு பருப்பானது அதனை உற்பத்தி செய்யும் முறையில் மிகவும் வேறுபடுகிறது.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்த துவரையை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கிறார்கள். மறுநாள் பருப்பு லேசாக முளை கட்டியதும் அதனை நன்றாக செம்மண் கலந்து சூரிய வெளிச்சத்தில் களத்தில் காய வைக்கிறார்கள். மூன்று அல்லது நான்கு நாட்கள் கழித்து அதன் தன்மையை பொறுத்து பின்னர் எந்திரங்களில் பருப்பை உடைக்கிறார்கள். அதாவது அரவை செய்கிறார்கள். இந்த அரவையின்போது பருப்பின் மேல் ஒட்டியிருக்கும் மணல் மற்றும் காவி நிறம் எல்லாம் போய்விடும். அதன் பின்னர் அவற்றை மூட்டைகளில் நிரப்பி விற்பனை செய்கிறார்கள்.
இந்த நாட்டு பருப்பு மூலம் சாம்பார் தயாரித்தால் அவை 8 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். உடல் நலத்திற்கும் மிகவும் ஆரோக்கியமானது என்கிறார் திருச்சியைச் சேர்ந்த நாட்டுப்பருப்பு தயாரிப்பாளரும் ,தமிழ்நாடு வர்த்தக சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளருமான தங்கராஜ்.
நாட்டுப்பருப்பின் சிறப்பு அம்சங்கள் பற்றி மேலும் அவர் கூறுகையில்
இயற்கையை தேடி செல்லும் மக்கள் உணவுப் பொருட்களை இயற்கை வழியில் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் நமது அன்றாட உணவுகளில் ஒன்றான சாம்பார் தயாரிப்பதற்கு நாட்டுப் பருப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக தற்போது கடைகளில் விற்கப்படும் எனப்படும் இந்த பருப்பில் சாம்பார் தயாரித்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை உள்பட சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதற்கு காரணம் அதன் ஈரத்தன்மை. மேலும் பல நாட்கள் அதனை சேமித்து வைக்க முடியாது. ஆனால் நாட்டுப்பருப்பு அப்படி அல்ல. நாட்டுப்பருப்பு மூலம் சாம்பார் தயாரித்தால் வாயுத்தொல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் வராது என்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறந்ததாகும்.
இதற்கு காரணம் முளை கட்ட தொடங்கியதும் தான் அதனை நாம் தயாரிக்க தொடங்குகிறோம். நாட்டுப்பருப்பு தற்போது பிரபலமடைந்து வருகிறது. தமிழகத்திலேயே திருச்சியில் மட்டும்தான் இந்த நாட்டுபருப்பு தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதைத் தயாரிப்பதற்கு ஆகும் செலவு, காலநேரம் ஆகியவை மிக முக்கியமானதாகும். அதனால் தான் இந்த தொழிலில் அதிகம் யாரும் ஈடுபடுவதில்லை. நாங்கள் மக்களின் உடல் நலன் கருதி இதனைத் தயாரித்து வருகிறோம். நாட்டு பருப்பு தயாரிப்பிற்கு ஏற்ற காலகட்டம் மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் தான். இந்த காலகட்டத்தில் தான் நாட்டுப்பருப்பிற்கு தேவையான அளவு சீதோஷ்ண நிலை சரியாக இருக்கும்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கிறார்கள். மேலும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் குறிப்பாக டெல்லி, கொல்கத்தா, மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் நாட்டுப்பருப்பின் சிறப்பை உணர்ந்து வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். விமானம் மூலமும் இவை அனுப்பி வைக்கப்படுகிறது.
பொதுவாக தரமான ஒரு பொருளை தயாரிப்பதற்கு கால நேரம் அதிகமாகத்தான் ஆகும். அந்த வகையில் நாட்டுப்பருப்பு தயாரிப்பதற்கும் அதிக காலம் தேவைப்படுகிறது. ஆனால் அதனை வாங்கி சாம்பார் தயாரித்தால் உடல்நலத்திற்கு தீங்கு இல்லாமல் நோய்நொடிகள் இல்லாமல் வாழலாம் என்பதற்காக மக்களிடம் நாட்டுப்பருப்பு வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. நாமும் அதனை ஒருமுறை வாங்கி சாம்பார் தயாரித்து பார்ப்போமா?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu