அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை

சென்னையில் இன்று அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் வரும் மார்ச் 6ஆம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
15வது ஊதிய ஒப்பந்தம், பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். ஐகோர்ட்டு விடுத்த அறிவுரையை ஏற்று அப்போது போராட்டத்தை ஒத்திவைத்தனர்.
இதையடுத்து இந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசு தரப்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர். சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், தொழிலாளர் நல தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் மார்ச் 6ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை முடிவில் துணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உள்ளதாகவும், அரசின் கவனத்திற்கு தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் சென்றுள்ளதாகவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu