சிவா எம்.பி. வீடு மீது தாக்குதல்: 4 தி.மு.க. நிர்வாகிகள் அதிரடி நீக்கம்
திருச்சி சிவா எம் பி.
திருச்சியில் அமைச்சர் நேரு, சிவா எம். பி. ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. சிவா எம்.பி. வீடு மீது தாக்குதல் நடத்திய நான்கு பேர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி ஸ்டேட் வங்கி ஆபீசர்ஸ் காலனியில் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், ராஜ்யசபா எம்.பி. யுமான திருச்சி சிவா வீடு உள்ளது. இவரது வீட்டின் அருகில் இன்று மாநகராட்சி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட டென்னிஸ் கோட் மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என்.நேரு கலந்து கொண்டு டென்னிஸ் கோட்டை திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழா தொடர்பான அழைப்பிதழ் மற்றும் நோட்டீசுகளில் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் சிவா எம். பி. யின் பெயர் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவா எம். பி. யின் ஆதரவாளர்கள் அமைச்சர் நேரு விழா முடிந்து வெளியே வந்த போது அவரது காரை மறித்து அவருடன் வாக்குவாதம் செய்தனர். கருப்பு கொடியும் காட்டினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நேரத்தில் அமைச்சர் நேருவுடன் வந்த அவரது ஆதரவாளர்கள் சிவா எம் பி யின் வீட்டுக்குள் புகுந்து அடித்து நொறுக்கினார்கள். அவரது கார் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை பார்த்த போலீசார் அவற்றை தடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டியதா சிவா எம்.பி. யின் ஆதரவாளர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் விசாரணை கைதியாக வைக்கப்பட்டிருந்தனர். அப்போது நேருவின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில் ஒரு பெண் காவலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சிவா எம்.பி. தரப்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இரு தரப்பிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேருவின் ஆதரவாளர்கள் போலீசில் நிலையத்திற்குள் புகுந்து தாக்கியது மற்றும் சிவா எம். பி. வீட்டை அடித்து நொறுக்கிய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.அவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருச்சியில் பெரும் பரபரப்பை இந்த சம்பவம் இன்று ஏற்படுத்தியது.
திருச்சி தி.மு.க.வினர் மத்தியில் ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான முத்து செல்வம், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான காஜாமலை விஜய், வட்ட செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ராமதாஸ் மற்றும் அந்தநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் துரைராஜ் ஆகிய நான்கு பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்திருப்பதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu