T20 அகில இந்திய கிரிக்கெட் போட்டியில் திருச்சி மருத்துவர்கள் அணி சாம்பியன்

T20 அகில இந்திய கிரிக்கெட் போட்டியில் திருச்சி மருத்துவர்கள் அணி சாம்பியன்
X
T20 அகில இந்திய கிரிக்கெட் வெற்றிக்கோப்பையுடன்  திருச்சி டைரண்ட்ஸ் அணி வீரர்கள்.
T20 அகில இந்திய கிரிக்கெட் போட்டியில் திருச்சி மருத்துவர்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்று உள்ளது.

அகில இந்திய கிரிக்கெட் போட்டியில் திருச்சி மருத்துவர்கள் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

உலக கோப்பைக்கான T.20 கிரிக்கெட் போட்டி சமீபத்தில் தான் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி அரையிறுதி போட்டியுடன் வெளியேறியது. இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. கிரிக்கெட் இன்று சர்வதேச நாடுகளால் நடத்தப்படும் ஒரு போட்டி என்பது மட்டுமல்லாமல் இந்திய அளவில் மாநிலங்களுக்கு இடையே, கல்லூரிகளுக்கு இடையே, பள்ளிகளுக்கு இடையே மற்றும் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட பல்வேறு குழுக்களுக்கு இடையே நடக்கும் போட்டி என்கிற நிலை மாறி பல்வேறு தளங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், பொறியாளர்கள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள்,பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், என அனைத்து தரப்பினராலும் நடத்தப்படும் ஒரு விளையாட்டு போட்டியாகவும் மாறி வருகிறது.

ஓய்வு நாள் என்றால் மைதானம் போன்ற இடம் எங்கு கிடைத்தாலும் கிரிக்கெட் பாலையும், மட்டையையும் பிடித்துக் கொண்டு கிரிக்கெட் ஆடுவதை எல்லா இடங்களிலும் காண முடிகிறது. அந்த அளவிற்கு கிரிக்கெட் இன்று ஒரு நட்சத்திர விளையாட்டாக மாறி வருகிறது. இந்த கிரிக்கெட் ஆர்வம் மருத்துவர்களையும் விட்டு வைக்கவில்லை. நேரம் காலம் எதுவும் இன்றி சதா மருத்துவமனை, நோயாளிகள், சிகிச்சை என மன அழுத்தத்தில் மக்கள் பணி செய்யும் மருத்துவர்கள் தங்களது ஓய்வு நேரங்களில் மன அழுத்தத்தை குறைக்க கிரிக்கெட் பயிற்சி பெற்று வருகிறார்கள் இதற்காக தனியாக கிரிக்கெட் மைதானங்களை அமைத்து வைத்திருக்கிறார்கள். சில வசதியான மருத்துவர்கள் தங்கள் வீடுகளிலேயே கூட வலை பயிற்சி செய்வதற்கான வசதியையும் செய்து இருக்கிறார்கள்.

இப்படி பயிற்சி செய்து வரும் டாக்டர்கள் அகில இந்திய அளவில், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவது உண்டு. இது போன்ற போட்டிகள் அகில இந்திய அளவில் வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நமது நாட்டின் மிகச்சிறந்த சுற்றுலா தளமான கோவாவில் அகில இந்திய அளவில் மருத்துவர்களுக்கான T.20 கிரிக்கெட் போட்டி கடந்த 16ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து மருத்துவர்களின் 20 அணிகள் பங்கு பெற்று விளையாடினார்கள்.

இந்த போட்டியில் திருச்சியில் இருந்து பிரபல டாக்டர் ஹரி பிரசாத் தலைமையிலான திருச்சி டைரண்டஸ் அணியும் பங்கு பெற்றது. இந்த அணியில் மருத்துவர்கள் அமர்நாத், தீபம் குணசேகரன், ஸ்ரீராம் கோபால், ஆதித்யா, அசோக் சிகாமணி, அஸ்வின், உதய் ஆதித்யா, அஸ்வின் பாலாஜி, விக்னேஷ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.


நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் திருச்சி டைரன்ட்ஸ் மருத்துவர்கள் அணியும், ஹைதராபாத் ஸ்பார்ட்டன்ஸ் அணியும் களம் இறங்கின. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் ஸ்பார்ட்டன்ஸ் அணி 76 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய திருச்சி டைரண்ட்ஸ் அணி 80 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருச்சி டைரண்ட்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்திற்கான பரிசு கோப்பை வழங்கப்பட்டது. கிரிக்கெட் T20 அகில இந்திய சாம்பியன் பட்டம் பெற்ற திருச்சி மருத்துவர்களின் திருச்சி டைரண்ட்ஸ் அணிக்கு சக மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story